டெல்லி: மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை விதிகளை மீறி எடுத்துச்சென்றதாக ரூ.1,100 கோடி ரொக்கம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. அதன்படி முதலிடத்தில் டெல்லியும், 2வது இடத்தில் தமிழ்நாடும் இடம்பெற்றுள்ளது.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் என்று கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையம் தேதிகளை அறிவித்தது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதுவரை 6 கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ளன. கடைசி கட்டத் தேர்தல் இன்று (ஜூன் 1ந்தேதி) நடைபெறுகிறது.
தேர்தலின் போது அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம், நகை, பரிசுப் பொருட்களை வழங்குவதைத் தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த மே மாதம் 30-ம் தேதி வரை ரூ.1,100 கோடி மதிப்புள்ள ரொக்கம் மற்றும் தங்க நகைகளை வருமான வரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட தொகையை விட 182 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்தலையொட்டி, வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பணம் சட்டவிரோதமாக கடத்தப்படுவதை தடுக்க அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டன. தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்படுவதுடன், அதிகளவில் பணம் மற்றும் தங்கம் பறிமுதல் குறித்து பறக்கும் படையினர் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்தன.
இந்நிலையில், மே 30 அன்று வரை தேர்தல் காலத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ.1,100 கோடி ரொக்கம் மற்றும் தங்கம் நகைகள் பறிமுதல் செய்துள்ளனர்.
பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட பட்டியலில் டில்லி மற்றும் கர்நாடகா முதலிடத்தை பகிர்ந்து கொண்டு உள்ளன. அங்கு ரூ.200 கோடி பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அடுத்து 2வது இடத்தில் தமிழகம் உள்ளது. 150 கோடி ரூபாய் பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. ஆந்திரா, ஒடிசா மற்றும் தெலுங்கானாவில் ரூ.100 கோடி அளவு பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் காலத்தில் இந்தளவு பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும். கடந்த 2019ம் ஆண்டை காட்டிலும் 182 சதவீதம் கூடுதல் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 2019 ல் ரூ.390 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.