ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டி முதல் ஆட்டத்தில் கனடாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்க அணி வீழ்த்தியுள்ளது.

மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள இந்த போட்டித் தொடரின் முதல் ஆட்டம் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள கிராண்ட் ப்ரியாரி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.

இந்த தொடரில் கலந்துகொள்ளும் 20 அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது, இதில் இன்று நடைபெற்ற குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள யு.எஸ்.ஏ. மற்றும் கனடா அணிகள் மோதின.

முதலில் விளையாடிய கனடா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நவ்நீத் தலிவால் 61 ரன்கள் எடுத்தார்.

195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அமெரிக்கா 42 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து திணறிய நிலையில் மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கௌஸ் மற்றும் ஜோன்ஸ் ஜோடி அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.

ஜோன்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 94 ரன்கள் எடுத்தார், கௌஸ் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் அமெரிக்கா 17.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா ஜூன் 5ம் தேதி நடைபெறும் தனது முதல் ஆட்டத்தில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.

இந்த பிரிவில் இடம்பெற்றுள்ள மற்றொரு அணியான பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி ஜூன் 9ம் (ஞாயிற்றுகிழமை) தேதி மோதவுள்ளது.

ஓவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடம்பெறும் அணிகள் சூப்பர் 8 சுற்றில் விளையாடவுள்ளது, இதனைத் தொடர்ந்து அரையிறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த தொடரின் இருந்து ஆட்டம் ஜூன் 29ம் தேதி நடைபெற உள்ளது.