சென்னை: மத்திய அரசிடமிருந்து ‘ஒப்புயர்வு’ உயர்கல்வி நிறுவனம் என்ற அந்தஸ்தைப் பெற்ற அண்ணா பல்கலையை இரண்டாகப் பிரிப்பது தொடர்பாக அறிக்கை அளிப்பதற்காக துணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலையை இரண்டாகப் பிரிப்பது தொடர்பாக ஆலோசிக்க ஏற்கனவே அமைச்சர்கள் அடங்கியக் குழுவை நியமித்தது தமிழக அரசு. இக்குழுவில், ‍செங்கோட்டையன், தங்கமணி, ‍ஜெயக்குமார், சி.வி.சண்முகம் மற்றும் அன்பழகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இக்குழுவின் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்து பெற்றாலும், அப்பல்கலையில் தொடரும் இடஒதுக்கீடு உள்ளிட்ட மாநில அரசின் உரிமைகளை பாதுகாப்பது சம்பந்தமாக அமைச்சர்கள் குழுவின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மேலும், மத்திய அரசின் தொடர்ச்சியான நிதியை உறுதிசெய்வது உள்ளிட்டவை குறித்து அமைச்சர்கள் குழுவின் இரண்டாவது கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. மேலும், பல்வேறு அம்சங்கள் குறித்து ஆராய்ந்து, அறிக்கை அளிப்பதற்காக புதிதாக துணைக்குழு ஒன்றை அமைக்கவும் அமைக்க முடிவெடுக்கப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். இக்குழுவில் கல்வியாளர்கள் இடம்பெற்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.