இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ படம் கடந்த வருடம் ஓடிடி-யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தயாரானது.
தற்போது இப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் அக்ஷய்குமார் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது..
இந்தியில் உருவாகும் ‘சூரரைப்போற்று’ படத்தையும் சுதா கொங்கராவே இயக்குகிறார். இதனை சூர்யா தனது 2டி பட நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.
பிறருக்கு உத்வேகத்தை தரும் கேப்டன் கோபிநாத்தின் கதையை இந்தியில், அபண்டன்ஷியா என்டெர்டெய்ன்மெண்டுடன் இணைந்து தயாரிப்பது எனக்கு அதிக மகிழ்ச்சியை தருகிறது என சூர்யா கூறியுள்ளார் .
இந்த நிலையில், ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய தடை விதிக்கக் கோரி சிக்யா எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இது தொடர்பாக சிக்யா எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் அளித்த புகார் மனுவில், இணை தயாரிப்பாளரான தங்களிடம் முறையான அனுமதியைப் பெறாமல் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை 2டி நிறுவனம் விற்றுவிட்டதாகவும், இப்படம் தொடர்பாக இரு நிறுவனமும் செய்துகொண்ட ஒப்பந்தத்தை 2டி நிறுவனம் மீறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.