புதுச்சேரி:

புதுச்சேரி சட்டப் பேரவையின் புதிய சபாநாயகராக சிவக்கொழுந்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவர் நாளை காலை பதவியேற்கிறார்.


புதுச்சேரி சபாநாயகராக பதவி வகித்த வைத்திலிங்கம் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, புதுச்சேரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில், புதுச்சேரி துணை சபாநாயகராக இருந்த சிவக்கொழுந்து இன்று புதிய சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கான தேர்தல் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு நடக்கிறது. சபாநாயகர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என சட்டப்பேரவை செயலாளர் வின்சென்ட் ராயர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட சிவக்கொழுந்து, இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

அவருடன் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், காங்கிரஸ் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் இருந்தனர்.
எதிர்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கூட்டணி சார்பில் பிற்பகல் 12 மணி வரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனையடுத்து புதுச்சேரி சட்டப்பேரவை புதிய சபாநாயகராக சிவக்கொழுந்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

நாளை காலை கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில் அவர் பதவியேற்கிறார். இதனையடுத்து புதிய சபாநாயகரை உறுப்பினர்கள் வாழ்த்திப் பேசுவர்.

புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட சிவக்கொழுந்து ரியல் எஸ்டேட் தொழில் அதிபர். 2016 சட்டப்பேரவை தேர்தலில் லாஸ்பேட்டை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதற்கிடையே, கால அவகாசம் தராமல் சபாநாயகர் தேர்தலை நடத்துவதாகக் கூறி, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய எதிர்கட்சிகள் தேர்தலை புறக்கணித்தனர்.