டெல்லி

டெல்லி நகரில் காற்று மாசு அதிகரிப்பால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசு மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் \ விவசாய ஆண்டின் இறுதியில் பயிர் கழிவுகளை எரித்து அழித்து, புதிய பயிரிடலுக்கு தயாராவார்கள். இதனால் டெல்லியில் காற்று மாசு ஏற்படுகிறது.டெல்லியில் மாசு 400ஐ தாண்டியிருக்கிறது.

பனிமூட்டம் போல காற்று மாசு நிலவுவதால், சாலைப்போக்குவரத்து மட்டும் இன்றி விமானப்போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு அதிகரித்து வருவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள், கர்ப்பிணிகள் இந்த பிரச்னையால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

காற்று மாசு கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அவை பெரிய அளவில் கைக்கொடுக்கவில்லை. எனவே அதிகரிக்கும் காற்று மாசுவை கருத்தில் கொண்டு டெல்லியில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

அத்தியாவசிய பொருட்களை ஏற்றிவரும் வாகனங்களைத் தவிர இதர வாகனங்கள் டெல்லிக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் பணியாற்றவும், மீதமுள்ள ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  6 முதல் 9ம் வகுப்பு வரை மற்றும் 11ம் வகுப்புக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.