டெல்லி: கொரோனா பாதிப்பு காரணமாக இந்தாண்டு இறுதிவரை பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை என மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி முதல ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள்,கல்லூரிகளும் அடைக்கப்பட்டன. பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், கல்லூரியின் இறுதித்தேர்வுகள் மட்டும் செப்டம்பரில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தமிழகம் உள்பட பல மாநிலங்களில் தனியார் மற்றும் அரசு பள்ளிகள், கல்லூரிகள் ஆன்லைன் மூலம் கல்வி போதிக்கத் தொடங்கி உள்ளன. இருந்தாலும், பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது எப்போது என்ற கேள்வியும் பெற்றோர்களிடையே எழுந்துள்ளது.
இந்த நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய கல்வித்துறை செயலாளர் அமித்கரே கலந்து கொண்டார். அப்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்று இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டால் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை என்றும், கல்லூரி இறுதியாண்டு தேர்வு இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என மத்திய உயர்கல்வி செயலாளர் அமித்கரே நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.