டில்லி
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் பணப்புழக்க விகிதம் 143% ஆக அதிகரித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மார்ச் மாதம் அனைத்து வங்கிகளின் குறைந்த பட்ச பணப் புழக்கத்தை 100% ஆக நிர்ணயம் செய்தது. கொரோனா தாக்கம் காரணமாக கடன் வசூல் குறைந்ததால் இது 80% ஆகக் குறைந்தது. இந்நிலையில் இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் பணப்புழக்க விகிதம் 143% ஆக அதிகரித்துள்ளது.
குறைந்தபட்ச பணப்புழக்க விகிதம் என்பது குறைந்த கால கடன் மற்றும் அவற்றின் வசூல் ஆகியவற்றைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. பொதுவாகவே பல வங்கிகளில் இது குறைந்த பட்ச பணப்புழக்க விகிதத்தை விட 15-20% வரை குறைவாகவே காணப்படும். அப்படி இருக்க ஒரு வங்கியில் இத்தனை உயர்வு ஏற்பட்டால் அந்த வங்கி எவ்வித கடனையும் அளிப்பதில்லை எனப் பொருள் கொள்ளலாம் என நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
சமீபத்தில் யெஸ் வங்கியில் இந்த நிலை ஏற்பட்டது. இதற்கு காரணம் இந்த வங்கியில் இருந்து பணம் எடுக்க விதிக்கப்பட்ட தடையாகும். அந்த கால கட்டத்தில் யெஸ் வங்கியின் பணப்புழக்க விகிதம் 130% வரை அதிகரித்தது. மேலும் அப்போது யெஸ் வங்கிக் கடன் வழங்கக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
தற்போது பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் வங்கிகளில் கடன் வாங்குவோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஒரு கருத்து நிலவி வருகிறது. மேலும் சமீபத்திய பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக ஏற்கனவே வாங்கி உள்ள கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் புதுக் கடன்களைப் பெற யாரும் முன்வரவில்லை எனவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் அர்சுஅறிவித்துள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன் திட்டத்தினால் கடன் வழங்குவது அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது. வங்கிகள் கடன் வழங்கி அதில் பெறும் வட்டி என்பதே வங்கிகளுக்கு முக்கிய வருமானமாக உள்ளது. அது குறைந்ததால் வங்கிகளின் வருமானமும் குறையக்கூடும்.
இதனால் முதலீடு செய்பவர்களுக்கு அளிக்கும் வட்டியை வங்கிகள் குறைத்து வருகின்றன. இந்த ஆண்டில் மட்டும் ஸ்டேட் வங்கி தனது சேமிப்பு வங்கி வட்டி விகிதத்தை 2.7% குறைத்துள்ளது. மேலும் நிரந்தர வைப்பு நிதி வட்டியும் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.