பாட்னா: “அரசியலில் நிரந்தர நண்பரோ, பகைவரோ கிடையாது. ஆசை மட்டுமே நிரந்தரமானது” என்ற பொன்மொழி மற்றொருமுறை பீகாரில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

லாலுபிரசாத் மனைவியும், பீகார் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவியின் இல்லத்தில் நடைபெறும் இஃப்தார் விருந்தில், எப்போதும் இல்லாத வகையில், முதன்முறையாக பாரதீய ஜனதா கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பீகாரில் பாரதீய ஜனதாவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம், மோடியின் அரசில் இணையாமல் வெளியிலிருந்து ஆதரவு தருவதாக அறிவித்திருக்கும் சூழலில், இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளதும் பலரின் கவனத்தைக் கவர்ந்துள்ளது.

“பாரதீய ஜனதா செலுத்திய செல்வாக்கின் அடிப்படையிலேயே, ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியின் அரசியல் பண்புநிலை மேம்பட்டுள்ளது மற்றும் இது வரவேற்கத்தக்க ஒரு விஷயம்” என்று பாரதீய ஜனதா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “மறப்போம் மன்னிப்போம்” என்ற வாக்கின் அடிப்படையிலேயே, பாரதீய ஜனதாவுக்கு, இஃப்தார் விருந்திற்கான அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டதாக ராஷ்ட்ரிய ஜனதாதளம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்துமுடிந்த லோக்சபா தேர்தலில், வேறுவேறு அணிகளில் போட்டியிட்ட இரண்டு கட்சிகளும் பரஸ்பரம் மிகக் கடுமையாக விமர்சனங்கள் செய்துகொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.