டில்லி
இளம் கிரிக்கெட் வீரர் ரியான் பராக் தாம் தோனியின் ஆட்டோகிராபுக்காக காத்திருந்ததை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்திய இளம் கிரிக்கெட் வீரர் ரியான் பராக் 17 வயதானவர் ஆவார். இவர் அசாம் மாநில கிரிக்கெட் அணியில் கடந்த 2016-17 ஆம் ஆண்டில் விளையாட தொடங்கினார். வலது கை பாட்ஸ்மேன் ஆன இவருக்கு பல ரசிகர்கள் அசாமில் உண்டு. தற்போது ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ரியான் இடம் பெற்றுள்ளார்.
இவர் கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி நடந்த முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக விளையாடினார். இவர் சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் பயிற்சி பெற்று வருகிறார். இவர் தனது குழந்தைப் பருவத்தில் இருந்தே தோனியின் ரசிகர் ஆவார்.
இவர் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “எனது முதல் போட்டியின் போது எனக்கு தோனி பல அறிவுரைகளை அளித்தார். நான் சிறுவயதில் இருந்தே தோனியின் ரசிகன் என்பதை அறிந்து அவர் மகிழ்ந்தார். எனது தந்தை பராக் தாஸ் ஒரு புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் ஆவார் அவர் அசாம் மாநில அணியில் விளையாடிய போது தோனிக்கு எதிராக விளையாடி உள்ளார்.
நான் அப்போது அவருடன் சென்று தோனியின் ஆட்டத்தை கண்டு ரசித்துள்ளேன். தோனியின் ஆட்டோகிராப் வாங்குவதற்காக வெகு நேரம் காத்திருந்தேன். எனது தந்தை என்னை அறிமுகம் செய்து வைத்தார். எனக்கு தோனி ஆட்டோகிராப் போட்டு தந்தார். ஆப்போது நான் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நான் இன்றும் பத்திரமாக வைத்துள்ளேன்” என பெருமிதத்துடன் தெரிவித்தார்.