சண்டிகர்: உண்மையாகவே போராடும் விவசாயிகள் மீண்டும் போராட்ட களத்திற்கு திரும்ப வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் குடியரசு தினத்தையொட்டி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அனுமதித்த நேரத்திற்கு முன்பே பேரணி தொடங்கி டெல்லியில் நுழைந்ததால், காவல்துறை கண்ணீர் புகை குண்டு வீசினர். பின்னர் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் தடியடி நடத்தப்பட்டது.
வன்முரை தீவிரமடைந்ததை அடுத்து டெல்லி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. விவசாயிகள் மீது தடியடி நடத்தியத்துக்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந் நிலையில், உண்மையாக போராடும் விவசாயிகள் மீண்டும் போராட்ட களத்திற்கு திரும்ப வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: டெல்லியில் நடைபெற்ற நிகழ்வுகள் அதிர்ச்சியளிக்கிறது. எந்த வகையிலும் வன்முறை ஏற்றுக் கொள்ள முடியாது.
அமைதியான முறையில் போராடும் விவசாயிகளின் நல்லெண்ணத்தை இது கெடுக்கும். அனைத்து உண்மையான விவசாயிகளும் டெல்லியை விட்டு வெளியேறி எல்லைகளுக்கு திரும்புமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.