திருநெல்லி, கேரளா

தென் இந்தியாவின் காசி என அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் உள்ள திருநெல்லியில் ராகுல் காந்தி தனது மூதாதையர்களுக்கு திதி கொடுத்துள்ளார்.

கேரளாவில் அமைந்துள்ள திருநெல்லி என்னும் இடத்தில் உள்ள கோவில் நீத்தார் இறுதிக் கடன் செய்யும் இடமாகும். பாபநாசினி என்னும் நதிக்கரையில் அமைந்துள்ள இந்த கோவில் தென் இந்தியாவின் காசி என அழைக்கப்படுகிறது. காசி நகரில் மூதாதையர்களுக்கு திதி அளிப்பதை போல் இங்கும் அளிப்பது நீண்ட நெடுங்காலமாக நடைபெறுகிறது.

திருநெல்லியில் உள்ள பாபநாசினி நதியில் கடந்த 1991 ஆம் வருடம் மறைந்த ராஜிவ் காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்டது. அது முதல் இங்கு வரவேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு விருப்பம் இருந்துள்ளது. ஆயினும் பாதுகாப்பு காரணமாக அவர் இங்கு வர இயலாமல் இருந்துள்ளார். தற்போது அவர் இந்த ஆலயம் அமைந்துள்ள வயநாடு மக்களவை தொகுதியில் போட்டி இடுகிறார்,

தற்போது கேரளாவில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் ராகுல் காந்தி இந்த கோவிலுக்கு இன்று வந்துள்ளார். ராகுல் காந்தி தனது தந்தை, பாட்டி, மூதாதையர் மற்றும் புல்வாமா தாக்குதலில் இறந்த தியாகிகளுக்கு முறைப்படி திதி கொடுத்துள்ளார். அவருக்கு இந்த சடங்குகளை கோவிலின் அர்ச்சகர்கள் செய்து வைத்துள்ளனர்.

இந்த சடங்குகள் முடிந்த பிறகு ராகுல் தனது டிவிட்டரில், “எனக்கு என் தந்தையின் நினைவுகளும் அவருடன் கழித்த தினங்களும் மீண்டும் என் ஞாபகத்துக்கு வந்துள்ளது. நான் இன்று வயநாட்டில் உள்ள திருநெல்லி கோவிலுக்கு சென்றேன். அந்த கோவியிலும் அதன் சுற்றுப்புறங்களும் அமைதி மற்றும் மன நிம்மதியை அளிக்கும் வண்ணம் உள்ளன.” என பதிந்துள்ளார்.

 

[youtube https://www.youtube.com/watch?v=1-xncXM42r4]