டில்லி:
டில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி, தமிழர்கள் மீது மாற்று மொழி திணிக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தார்.
மேலும் மோடி அரசு மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.
டில்லியில், இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் காங்கிரஸ் கட்சியின் 2 நாள் மாநாடு நேற்று முன்தினம் துவங்கியது.
அன்று, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பேசினார். பா.ஜனதாவிடம் இருந்து நாட்டை மீட்போம் என்று முழங்கினார்.
மாநாட்டின் கடைசி நாளான நேற்று, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உரையாற்றினார். அப்போது, அவர் பா.ஜனதாவுக்கு எதிராக ஆவேசமாக பேசினார்.
ராகுல் பேசியதாவது:-
பா.ஜ.க. ஆட்சியில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் மிகவும் அதிகரித்துள்ளது. நாட்டின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் சென்று இளைஞர்களிடம் கேட்டுப்பாருங்கள். தாங்கள் வேலையின்றி சிரமப்படுவதாக கூறுகின்றனர். இந்தியா வளர்ந்து வரும் நாடாக இருந்தாலும் வேலையில்லா திண்டாட்டம் பெருகி வருகிறது. மக்களின் நம்பிக்கையை பா.ஜ.க.வின் மோடி அரசு இழந்துவிட்டது.
ஆனால், இந்த உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை பா.ஜ.க. திசைதிருப்புகிறது.
தற்போது நடக்கும் குருஷேத்திர போரில், பா.ஜ.க. கவுரவர்களைப் போல, அதிகாரத்துக்காக போராடுகிறது. ஆனால், காங்கிரசோ பாண்டவர்களைப் போல், உண்மைக்காக போராடுகிறது.
2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும்.
பா.ஜ.க., ஒரு அமைப்பின் குரலாகவே ஒலிக்கிறது. ஆனால், காங்கிரசோ, இந்த நாட்டின் குரலாக இருக்கிறது. நாட்டுக்காக பேசுகிறது. பா.ஜ.க.வைவிட காங்கிரசிடம் நாட்டு மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள்.
கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை பா.ஜ.க. தலைவராக ஏற்றுக்கொள்வார்கள், அதிகார போதையில் இருப்பவரை பா.ஜனதாவில் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், அத்தகைய நபர்களை காங்கிரசில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
மோடி என்ற பெயரே பெருமுதலாளிகளுக்கும், பிரதமருக்கும் இடையிலான நெருக்கத்தின் அடையாளமாக மாறி இருக்கிறது. அந்த அளவுக்கு வங்கிகளில் உள்ள மக்களின் பணத்தை கொள்ளையடிப்பவர்களை மோடி அரசு பாதுகாப்பாக வெளி நாடுகளுக்கு அனுப்பி வைக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய கொள்ளையை நடத்திய நிரவ் மோடி, மோடியின் பெயர் கொண்டவர்தான்.
அந்த மோடிக்கு இந்த மோடி, மக்களின் பணம் ரூ.30 ஆயிரம் கோடியை அளித்தார். அதற்கு கைமாறாக அந்த மோடி, இந்த மோடி தேர்தலை சந்திப்பதற்காக பணம் அளித்தார்.
தமிழர்கள் தங்கள் அழகான மொழியில் இருந்து பிற மொழிக்கு மாறுவதற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். தமிழர்கள் மீது மாற்று மொழி திணிக்கப்படுகிறது.
காங்கிரஸ் தவறு செய்யக் கூடியதுதான். ஆனால், பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையிலான வேறுபாடு இருக்கிறது. அதாவது, காங்கிரஸ் தவறுகளை ஒப்புக்கொள்ளும். பா.ஜனதா ஒப்புக்கொள்ளாது.
பணமதிப்பு நீக்கத்தை தவறு, பேரழிவு என்று உலகமே கூறியது. ஆனால், பா.ஜனதா ஏற்றுக்கொள்ளவில்லை. காங்கிரசாக இருந்தால், அது தவறுதான், தவறை திருத்திக்கொள்கிறோம் என்று கூறி இருக்கும்.
நாம் எல்லோரும் மனிதர்கள். தவறு செய்வது இயல்பு. ஆனால், மோடியோ தன்னை கடவுளின் அவதாரம் என்றும், தான் தவறே செய்ய மாட்டோம் என்றும் நினைத்துக்கொள்கிறார்.
உலகில் தற்போது அமெரிக்க பார்வை, சீன பார்வை என்ற இரு பார்வைகள் தான் இருக்கின்றன. இன்னும் பத்து வருடங்களில் இந்திய பார்வையும் இருப்பதை பார்க்க விரும்புகிறேன்.
கட்சி தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் இடையிலான சுவரை உடைக்க விரும்புகிறேன். கட்சியை திறமையான இளைஞர்களை கொண்டு நிரப்ப எண்ணுகிறேன்.
கட்சியினரிடம் ஒழுக்கம் வேண்டும். கட்சியை வெற்றி பெறச்செய்ய நாம் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு ஒன்றாக உழைக்க வேண்டும்” என்று ராகுல்காந்தி பேசினார்.