சண்டிகர்: மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு அமல்படுத்தி உள்ள  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநில பா.ஜ.கவின் பொதுச்செயலாளர் மால்விந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது பாஜக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாராளுமன்ற இரு அவைகளிலும், எதிர்க்கட்சி எம்.பி.க்களின் எதிர்ப்பை மீறி, மத்திய பாஜக அரசு 3 புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக உள்ளதாக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். குறிப்பாக,  பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பாஜக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் ஏற்கனவே, மோடி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியில் இருந்து வெளியேறி விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றன. அதுபோல, பல மாநில பாஜக தலைவர்களும், கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்.

இந்தநிலையில், பஞ்சாப் மாநில பாஜக பொதுச்செயலாளர் மால்விந்தர்சிங் காங், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனபே மாநில பாஜகவில் இருந்து பல க நிர்வாகிகள் பலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு, பா.ஜ.க அரசுக்கு எதிராக போர் கொடித் தூக்கியுள்ள நிலையில், தற்போது,  பா.ஜ.கவின் மத்திய நிர்வாகியாவும், பஞ்சாப் மாநில பா.ஜ.க.வின் பொதுச்செயலாளருமாக இருந்து வந்த மால்விந்தர் சிங், தனது பதவியை ராஜினாமா செய்வதாக கட்சியின் தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவரது ராஜினாமா கடிதத்தில்,   “விவசாயிகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்கள் குறித்து பல முறை எதிர்த்தும், எச்சரிக்கையும் விடுத்துவிட்டேன். ஆனால், அதற்கு உரிய மதிப்பும், பதில்களும் கிடைக்காத நிலையில், விவசாயிகளுக்காக தான் வகித்து வந்த கட்சியின் பொதுச்செயலாளர் என்கிற பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பல மாநிலங்களில் மோடி அரசின் வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக நிர்வாகிகளே கட்சியை விட்டு தலைதெறிக்க ஓடுவது, பாஜக தலைமைக்கு அதிர்ச்சியையும், பின்னடைவையும் ஏற்படுத்தி உள்ளது.