சென்னை: பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து விரைவில்வ தமிழகத்தில் கடுமையான போராட்டங்கள் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்து உள்ளார்.
தமிழகத்தில் சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டி உள்ளது. அதேபோல், நாடு முழுவதும் சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது. சென்னையில்தான் சிலிண்டர் விலை அதிகமாகும். 25 ரூபாய் ஏற்றப்பட்டு, சென்னையில் ஒரு சிலிண்டர் விலை ரூ.850 ஆக அதிகரித்துள்ளது. இது மக்களிடையே கடுமையான அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கரோனா பெருந்தொற்று காரணமாகவும், அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார பேரழிவினாலும் மக்களின் வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.25 உயர்த்தப்பட்டிருக்கிறது.
கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி ரூ.25, பிப்ரவரி 15 இல் ரூ.50, பிப்ரவரி 25 இல் ரூ.25, மார்ச் 2 இல் ரூ.25, ஜூலை 1 இல் ரூ.25 என, படிப்படியாக கேஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.
கடந்த இரு மாதங்களில் மட்டும் 32 முறை கேஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒரு கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 610.50 ஆக இருந்தது ரூ.240 விலை உயர்வு செய்யப்பட்டு, தற்போது ரூ.850-க்கு விற்கப்படுகிறது.
ஆனால், சேலத்தில் ஒரு சிலிண்டர் விலை ரூ.868.50 ஆக உயர்ந்திருக்கிறது. அதேபோல, வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.84 உயர்த்தப்பட்டு, ரூ.1,687.50 ஆக விற்கப்படுகிறது.
மத்திய பாஜக அரசு, மக்கள் மீது ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. தற்போது, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டிவிட்டது. டீசல் விலை பெட்ரோல் விலையை நெருங்கி, ரூ.93.74 ஆக விற்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தாலும், மத்திய பாஜக அரசின் வரி வருவாயை பெருக்குவதற்காக கலால் வரியை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. கடந்த 2014 இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பதவி விலகுகிற போது, கலால் வரி 1 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.9.48 ஆக இருந்தது, தற்போது ரூ.32.90 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.
அதேபோல, டீசலில் கலால் வரி ரூ.3.56-லிருந்து ரூ.31.80 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. கடந்த 6 ஆண்டுகளில் 300 சதவீதம் கலால் வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. 2020-21 ஆம் ஆண்டில் முதல் 10 மாதங்களில் கலால் வரியாக மட்டும் ரூபாய் 2 லட்சத்து 94 ஆயிரம் கோடி வரியை விதித்திருக்கிறது.
மக்கள் நலனில் அக்கறையில்லாமல் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை வரலாறு காணாத வகையில் உயர்த்தி வருகிற மத்திய பாஜக அரசுக்கு எதிராக அகில இந்திய அளவில் ஜூலை 7 முதல் 17 ஆம் தேதி வரை பலகட்டப் போராட்டங்களை நடத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்திருக்கிறது.
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வால் 29 கோடி நுகர்வோர் குறிப்பாக, தாய்மார்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதன்படி, தமிழகத்திலும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை எதிர்த்து விரைவில் கடுமையான போராட்டங்கள் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்”.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.