பெருமாளுக்கு உகந்த புரட்டாசி முடிவு பெற்று ஈசுவரன் மற்றும் முருகனுக்கு விசேஷமான ஐப்பசி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தின் சிறப்புகள், கடைபிடிக்க வேண்டிய விரதங்கள் குறித்து இங்கே காணலாம்..
தமிழ் காலக் கணிப்பு முறைப்படி ஆண்டின் ஏழாவது மாதம் ஐப்பசி ஆகும். சூரியன் துலாம் ராசியில் புகுந்து, அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள் ஐப்பசி ஆகும்.
‘‘ஐப்பசியதனிலோடுந் நீர்வரத்து
குன்றுமதனோடு நீருக்கு அலைதலுஞ்
சேரும். தானியமெலாம் பொன்னுக்கு
நிகரொப்ப நிற்கும் மெய்யே’’
-என்ற பாட்டிலிருந்து இந்த ஐப்பசி மாதத்தில் ஆற்று நீர்ப் பெருக்கு குறைந்து, நீருக்கு சற்று தட்டுப்பாடு மேலோங்கி நிற்கும். தானியங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருளும் விலை கூடிட ஏதுவாகும் என்றறியலாம்.
ஐப்பசி மாதம் அடைமழைக் காலம் என்பது பழமொழி. அத்துடன் ஐப்பசி ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் மாதமும் ஆகும். இம்மாதத்திற்கு துலா மாதம் என்ற பெயரும் உண்டு. இம்மாதத்தில் இந்தியாவின் முக்கிய பண்டிகையான தீபாவளி உள்பட பல்வேறு பண்டிகைகளை கொண்டாடப்படுகிறது.
புனிதமான ஐப்பசி மாதம் அனைத்து புனித நதிகளும், தமிழகத்தில் ஓடும் தெய்வீக நதியான காவிரி நதியில் சங்கமிப்பதாக ஐதீகம்.
ஜோதிட ரீதியாக பார்க்கும் போது துலாம் ராசி நவகிரகங்களில் “சுக்கிரன்” பகவானின் அதிகத்திற்குரிய ராசியாகும். காவிரி நதிக்கு நடுவே இருக்கும் ஸ்ரீரங்கம் எனப்படும் திருவரங்கத்தில் வீற்றிருக்கும் “ஸ்ரீரங்கநாதர்” சுக்கிர பகவானின் அம்சம் நிறைந்தவராவார்.
காவிரியில் நீராடும் துலா ஸ்நானம் என்ற நிகழ்வும் இம்மாதத்தில் மேற்கொள்ளப்படுகிறது.
தமிழ் கடவுளான முருகப்பெருமானை நினைத்து மேற்கொள்ளும் முக்கிய விரதமான கந்த சஷ்டி திருவிழாவும் இம்மாதத்தில் நிகழ்கிறது.
இம்மாத பவுர்ணமியில் சிவாலயங்களில் உலகின் பரம்பொருளான சிவபெருமானின் லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
கேதார கவுரி விரதம், முருகன் சுக்ரவார விரதம், தனத்திரயோதசி, யமதுவிதியை, கோவத்ச துவாதசி, பாபாங்குசா ஏகாதசி, இந்திர ஏகாதசி போன்ற நிகழ்வுகளும் ஐப்பசியில் நிகழ்கின்றன.
தீபாவளி
தீபாவளி இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடக்கூடிய பண்டிகையாகும். இது ஆண்டுதோறும் ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசியில் தென்இந்தியாவிலும், ஐப்பசி அமாவாசையில் வடஇந்தியாவிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இப்பண்டிகை இந்துக்கள், சமணர்கள், சீக்கியர்களால் மிகவிமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை வடஇந்தியாவில் லட்சுமி பூஜை என்றும், வங்காளத்தில் காளி பூஜை என்றும் வழங்கப்படுகிறது.
இப்பண்டிகையின்போது நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் மக்கள் நீராடுகின்றனர். இதற்கு கங்கா ஸ்நானம் என்று பெயர். பின் புதிய ஆடைகள், பட்டாசுகள், இனிப்புக்கள், பட்சணங்கள் வைத்து வீட்டில் வழிபாடு நடத்துகின்றனர்.
புதிய ஆடைகளை அணிந்து கோவில்களில் வழிபாடு நடத்துகின்றனர். உற்றார், உறவினர், நண்பர்களுக்கு இனிப்புகள், பட்டாசுகள், பரிசுப்பொருட்கள் வழங்கி மகிழ்கின்றனர்.
புதுமணத்தம்பதியர் தலைதீபாவளியை மணப்பெண்ணின் வீட்டில் கொண்டாடுகின்றனர். அன்பு, அமைதி, ஒற்றுமை ஆகியவற்றின் வெளிபாடாக தீபாவளி கொண்டாட்டம் அமைகிறது.
தீபம் என்றால் ஒளி, விளக்கு. ‘ஆவளி’ என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளிதரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம்.
ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீயகுணத்தை எரித்துவிட வேண்டும்.
வடமாநிலங்களில் தீபாவளி 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
1. முதல் நாள் திரயோதசி அன்று தனத் திரயோதசி மற்றும் யம தீபம்.
2. இரண்டாம் நாள் சதுர்த்தசி அன்று நரக சதுர்த்தசி தீபாவளி திருநாள்.
3. மூன்றாம் நாள் அமாவாசை அன்று கேதார கௌரி விரதம்
4. நான்காம் நாள் பிரதமை அன்று கார்த்தீக ஸ்நானம்
5. ஐந்தாம் நாள் துவிதியை அன்று யமத் துவிதியை.
யம தீபம்
ஐப்பசிமாதத்தில் தேய்பிறை திரயோதசி அன்று பிரதோச வேளையில் வீட்டிற்கு வெளியில் தென்திசை நோக்கி வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப (குறைந்தது ஐந்து) நல்லெண்ணெய் தீபத்தை தெற்கு நோக்கி ஏற்றி வழிபட வேண்டும். இதனால் வீட்டில் உள்ளவர்கள் நோய்கள் நீங்கி ஆரோக்கியமாக வாழ்வர்.
தீபாவளிக்கு முந்தைய தினத்தன்று யம தீபம் ஏற்றுவது நம் மரபு. யம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும், சொத்துகள் சேரும். அனைத்துவிதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே வரும் மாஹாளய பட்சத்தில் பூலோகத்துக்கு உங்கள் முன்னோர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு மாஹாளய அமாவாசை அன்று நீங்கள் திதி கொடுத்து இருப்பீர்கள். அப்படி வந்த அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது “யம தீபம்” மட்டுமே. அத் தீபத்தை நீங்கள் தீபாவளி காலத்தில் வருகிற திரயோதஸி திதியில் ஏற்ற வேண்டும்.
யம தீபமானது துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது. அவர்கள் பிரச்சினைகள் ஏற்படுத்துவதை நிறுத்திவிட்டு, உங்களுக்கு நலன்களைச் செய்வார்கள்.
சாஸ்திரப்படியான யம தீபம் ஏற்றும் முறை:
உங்கள் வீட்டின் உயரமான பகுதியில் யம தீபம் ஏற்றப்பட வேண்டும். தெற்கு திசை நோக்கி விளக்கு எரிய வேண்டும்.</p>
விளக்கேற்றிய பின்னர், இந்து பலிதானிகளையும் உங்கள் முன்னோரையும் மனதில் ஓரிரு நிமிடங்கள் சிந்திக்க வேண்டும்.
பின்னர்க் கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும்.
யமத்துவிதியை
ஐப்பசி மாத வளர்பிறை துவிதியை யமத் துவிதியை என்றழைக்கப்படுகிறது. யமத் துவிதியை அன்றுதான் யமதர்மராஜன் தனது சகோதரி வீட்டிற்கு சென்று உணவருந்தி சகோதரியை ஆசீர்வதித்த நாளாகும்.
எனவே அன்றைய தினம் சகோதரர்கள் சகோதரிகளின் வீட்டிற்குச் சென்று உணவருந்தி பரிசுப்பொருட்களைப் பரிமாறி சகோதரியை ஆசீர்வாதம் செய்ய வேண்டும். இன்று சகோதரன் சகோதரியின் அழைப்பின் பேரில் சகோதரியின் வீட்டிற்கு சென்று வாழை இலையில் உணவு அருந்தி பரிசுகளைப் பரிமாறிக் கொண்டு அசீர்வாதம் செய்தால் சகோதர சகோதரிகளின் அன்பு என்றும் நிலைத்திருக்கும். மேலும் சகோதரனுக்கு தீர்க்காயுளும் சகோதரிக்கு தீர்க்காயுளுடன் தீர்க்க சுமங்கலி யோகமும் உண்டாகும் என எமதர்மராஜன் கூறுகிறார்.
இவ்வாறு செய்வதால் ஒற்றுமை ஏற்படுவதுடன் சகோதர சகோதரிகள் நீடித்த ஆயுள் கிடைக்கப் பெறுவர். சகோதரிகள் தீர்க்க சுமங்கலி பாக்கியம் பெறுவர்.
நரக சதுர்த்தசி
குளியல் நேரம் அதிகாலை 03-00 மணி முதல் 06-00 மணிக்குள் குளிக்க வேண்டும். நல்லெண்ணையை தலை முதல் பாதம் வரை உடல் முழுவதும் தடவி பதினைந்து நிமிடம் ஊறவைத்து கொதிக்கும் வெந்நீரில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அரசம் பட்டை, புரசம் பட்டை, அத்திப் பட்டை, ஆலம் பட்டை, மாவிலிங்கப் பட்டை ஆகிய ஐந்து வகையான மூலிகைப் பட்டைகளை ஊர வைத்து தலைக்கு ஊற்றி குளிக்க வேண்டும். அதன்பின்னர் சுக்கிரன் ஹோரையில் புத்தாடைகள் அணிந்து கிருஷ்ணரையும் லட்சுமியையும் வழிபட வேண்டும்.
அன்னாபிஷேகம்
ஐப்பசி மாத பவுர்ணமியில் சிவாலயங்களில் உள்ள லிங்கத்திருமேனிக்கு அன்னத்தால் அபிசேகம் செய்யப்படுகிறது.
உலகில் வாழும் உயிரினங்களுக்கு எல்லாம் உணவளிக்கும் இறைவனுக்கு நன்றி கூறும் விதமாகவே ஐப்பசி பவுர்ணமி நாளில் அன்னாபிஷேகம் செய்கின்றனர். இந்த அன்னாபிஷேகத்தை பார்ப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம். இதைத்தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று கூறியுள்ளனர்.
தானங்களில் போதும் என்ற மனதிருப்தியை தருவது அன்னதானம் மட்டுமே. எனவே மனதுக்கு திருப்தி அளிப்பதும், உடல் இயக்கத்திற்கு காரணமானதுமான அன்னத்தை உலகுக்கெல்லாம் உணவளிக்கும் சிவபெருமானுக்கு ஐப்பசி பவுர்ணமியில் அபிசேகம் செய்து நன்றி தெரிவிக்கப்படுகிறது.
சமைத்த அன்னத்தை இறைவனுக்கு அபிஷேகம் செய்து காய்கறிகள்,பழங்களைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபடுகின்றனர். அன்னாபிஷேக நாளில் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அந்த அன்னமே பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனை சாப்பிடுபவர்களுக்கு உணவு பஞ்சமே ஏற்படாது என்பது நம்பிக்கை. இந்த நாளில் சிவபெருமானை தரிசிக்க அன்னாபிஷேகமும், அன்னதுவேஷமும் நீங்கும்.
வடித்த அன்னத்தை லிங்கம் முழுவதும் பூசி வழிபாடு நடத்தப்படுகிறது. வழிபாட்டின் முடிவில் சிவலிங்கத்தின் பாண பகுதியில் இருக்கும் அன்னமானது தனியே எடுக்கப்பட்டு நீர்நிலைகளில் கரைத்து விடப்படுகிறது.
ஆவுடைப்பகுதியில் இருக்கும் அன்னமானது தயிருடன் கலந்தோ, அல்லது தனியாகவோ அன்னதான உணவில் கலக்கப்படுகிறது.
அன்னாபிஷேகத்தைத் தரிசனம் செய்தால் நம்முடைய பாவங்கள் விலகும். புண்ணியம் கிட்டும். தாராள உணவு கிடைக்கும் பசிப்பிணி வராது என்று கருதப்படுகிறது. அன்னாபிஷேகம் எல்லா சிவாலயங்களிலும் உச்சிக்காலம் மற்றும் சாயாரட்சை காலங்களில் சிறப்பாக நடத்தப்படுகிறது. ஐப்பசி பவுர்ணமியில் விளக்கேற்றி வழிபட உணவு தானியங்கள் பெருகி பசிப்பிணி ஏற்படாது.
துலா ஸ்நானம்
ஐப்பசி மாதத்தில் காவிரியில் ஏனைய புண்ணிய நதிகள் கலப்பதால் காவிரியில் இம்மாதத்தில் நீராடுவது துலா ஸ்நானம் என்றழைக்கப்படுகிறது.
துலா ஸ்நானம் நிகழ்வு, ஸ்ரீரங்கத்திலும் மயிலாடுதுறையிலும் சிறப்பாகக் கருதப்படுகிறது. காவிரியில் துலா ஸ்நானம் செய்வதால் நம்முடைய மற்றும் நம்முடைய முன்னோர்களின் பாவங்கள் நீங்குகின்றன.
அழகு, ஆரோக்கியம், உடல்நலம், செல்வம், கல்வி, வலிமை, குழந்தைப்பேறு ஆகியவற்றை துலா ஸ்நானம் தருவதாகக் கருதப்படுகிறது. ஐப்பசி கடைசி நாள் மயிலாடுதுறையில் காவிரி நீராடல் கடைமுழுக்கு என்றழைக்கப்படுகிறது.
இந்த மாதத்தில் காவேரியில் ஸ்நானம் செய்தல் உத்தமம். காலை சூரிய உதயத்துக்கு முன் பிரம்ம முகூர்த்தத்தில் ஸ்நானம் செய்தல் மஹா உத்தமமாக கருதப்படுகிறது. . இந்த மாதத்தில் 63 கோடி புண்ய தீர்த்தங்கள் 14 லோகத்தில் இருந்து இந்த பூலோகத்தில் காவிரியில் கலந்து விடுவதாக சொல்லப்படுகிறது. தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்யும் பாபங்கள் அனைத்தும் இந்த காவேரியில் ஸ்நானம் செய்யும் போது விடுபடுகிறது.
துலா மாதத்தில் கங்கை தன்னிடம் சேரும் பாபங்களை போக்கிக் கொள்ள கர்நாடகாவில் உள்ள (தக்ஷிணகங்கா) ப்ரஹ்மகிரி மலையடிவாரத்தில் இருந்து நம் தமிழ்நாட்டில் காவேரியில் வந்து கலப்பதால் இந்த துலா ஸ்நானம் மிகவும் விசேஷம்.
100 நாட்கள் கங்கையில் குளித்த பலன் 3 நாட்கள் இந்த துலா மாதத்தில் காவேரியில் ஸ்நானம் செய்தால் கிட்டும் என்பது ஆச்சார்யர்கள் வாக்கு. ஸ்நானம் முடித்தவுடன் அவரவர்கள் யதா சக்திக்கு தக்கவாறு தானங்கள் செய்தால் தான் ஸ்நானம் பன்ன பலன் கிட்டும். இந்த ஆண்ட நம் காவேரியில் மஹா புஷ்கரம் கொண்டாடப்பட்டது இதில் மிகவும் விசேஷமாக சொல்லலாம். .
தனத்திரயோதசி
ஐப்பசிமாதத்தில் தேய்பிறை திரயோதசி தனத்திரயோதசி என்றழைக்கப்படுகிறது. திருமகளின் அருளை சேர்க்கும் நாள்.
அன்றைய தினம் தீபாவளிக்கு வேண்டிய பொருட்களையும், துணிகளையும், தங்க நகைகளையும் வாங்கி தீபாவளி அன்று மாலை லட்சுமிகுபேர பூஜை செய்தால் வீட்டில் செல்வம் பெருகும். இன்றைய தினம் அக்ஷய திருதியைக்கு சமமானது.
தனத்திரயோதசி அன்ற வாங்கும் பொருட்கள் பன்பமடங்க பெருகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. தங்கம் முதல் சாதாரண இரும்பு பொருட்கள் வரை நமது வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதும், முதலீடுகள் செய்வதும் சிறப்பு.
தன்வந்திரி ஜெயந்தி
திருமால் மக்களுக்காக மருத்துவராக தோன்றிய நாளே தன்வந்திரி ஜெயந்தியாகும்.நோய் வராமல் நல்ல உடல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் கிடைக்க தன்வந்திரி வழிபாடு செய்யப்படுகிறது. ஐப்பசிமாதத்தில் தேய்பிறை திரயோதசி அன்று திரயோதசி வேளையில் தன்வந்திரி பகவான் தோன்றினார். எனவே திரயோதசி வேளையில் தன்வந்திரி பகவானை வழிபட நோய் நொடி இல்லா ஆரோக்கிய வாழ்வு கிட்டும்.
ஸ்ரீ தன்வந்திரி, விஷ்ணு அம்சமாக பின்னிரு கரங்களில் சங்கு,சக்கரத்துடனும் முன் வலக்கையில் அட்டைப்பூச்சியை ஏந்தியும்,இடக்கையில் அமிர்த கலசத்துடனும் காட்சி அளிக்கிறார்.
அக்கால மருத்துவமுறையில் நோயாளியின் உடலிலிருந்து கெட்ட ரத்தத்தை உறிஞ்சி எடுத்து நோயை குணமாக்க அட்டைப்பூச்சிகள் பயன்படுத்தப்பட்டனவாம்.
திருமாலின் 24அவதாரங்களில் 17ஆவது அவதாரம் தன்வந்திரி அவதாரமாகும்.இந்து மதத்தில் தன்வந்திரி உடல் நலத்திற்காக வழிபடக்கூடிய கடவுள் ஆவார்.தன்வந்திரியை தேவர்களின் மருத்துவர் என்றும் கூறலாம்.
கோவர்தன தினம்
ஐப்பசி வளர்பிறை பிரதமை அன்று கிருஷ்ண பகவான் கோகுல மக்களை கடும்மழை மற்றும் புயலிலிருந்து காப்பாற்ற கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்தார். கோவர்த்தன கிருஷ்ணரை வழிபட நம்முடைய கவலைகள் மற்றும் துயரங்கள் நீங்கி வாழ்வில் வசந்தம் வீசும்.
கோவத்ச துவாதசி
ஐப்பசிமாதத்தில் தேய்பிறை துவாதசி கோவத்ச துவாதசி என்று அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் பசுவுக்கும் கன்றுக்கும் உணவு கொடுத்து வழிபாடு செய்ய வீட்டில் பெண்களும் குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் மகிழ்சியுடன் இருப்பார்கள்.
கந்த சஷ்டி
துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்;
நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை.
அமர ரிடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி
கந்த சஷ்டி விழா ஐப்பசி அமாவாசையை அடுத்த ஆறு நாட்கள் கொண்டாடப்படுகிறது. தீமையின் உருவாக திகழ்ந்த சூரபத்மனை அழித்த முருகப்பெருமான் வெற்றி பெற்றதன் அடையாளமாக இவ்விழா நடத்தப்படுகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வது விரதமுறையைக் கடைப்பிடிப்பது ஆகும்.
நம்மிடம் உள்ள தீயகுணங்களான ஆணவம், மாயை, கன்மம், காமம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகியவற்றை விடுத்து வரபில்லா ஆற்றல், தன்வயமுடைமை, இயற்கை உணர்வு, பேரருள் ஆகிய நற்குணங்களைப் பெறும் நோக்கில் இவ்விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த விரதத்தினை ஒப்பரும் விரதம் என்று கந்த புராணம் குறிப்பிடுகிறது.
எல்லா முருகன் கோவில்களிலும் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவ்விரதமுறையில் சிலர் ஆறுநாட்கள் உண்ணாமலும், ஒருவேளை உணவு உண்டும், சஷ்டி அன்று மட்டும் உண்ணாமலும் விரதம் மேற்கொள்கின்றனர்.
ஒரு சிலர் ஆறு மிளகை வாயிலிட்டு ஆறு கை நீரருந்தியும், ஒரு சிலர் மௌன விரதம் இருந்தும் இவ்விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.
இவ்விரத வழிபாட்டில் கந்த சஷ்டி கவசம், கந்தரனுபூதி, கந்த குரு கவசம், சண்முக கவசம், கந்தர் கலி வெண்பா, திருப்புகழ் போன்றவற்றை பாராணயம் செய்கின்றனர்.
இவ்விரத முறையால் உடல் மற்றும் உள்ளத்தூய்மை கிடைக்கும். நோய்கள் நீங்கும். பிள்ளைப்பேறு கிட்டும். சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது கந்த சஷ்டி குறித்த பழமொழியாகும்.
கந்த சஷ்டி கவசம் தினம் காலையிலும் மாலையிலும் ஓத அதுவும் பல தடவைகள் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான்.
முருகன் சுக்ர வார விரதம்
முருகப்பெருமானுக்கு நாள், நட்சத்திரம், திதி ஆகிய மூன்று முறைகளில் விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. நாள் விரதம் என்பது வெள்ளிக்கிழமை தோறும் கடைப்பிடிப்பதைக் குறிக்கும். இவ்விரதம் முருகன் சுக்ரவார விரதம் என்றழைக்கப்படுகிறது.
நட்சத்திர விரதம் என்பது கார்த்திகை விரதத்தையும், திதி விரதம் சஷ்டி விரதத்தையும் குறிக்கும். முருகன் சுக்ரவார விரதம் என்பது ஐப்பசி மாத முதல் வெள்ளி துவங்கி மூன்று ஆண்டுகள் வரை கடைப்பிடிக்கப்படுகிறது.
இவ்விரத முறையானது பகலில் ஒரு வேளை உணவு உண்டும், இரவில் பழம் உண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரத முறையால் துன்பம் செய்தவருக்கும் நன்மை செய்யும் மனம் கிடைக்கும்.
கேதார கவுரி விரதம்
இவ்விரதம் புரட்டாசி மாதம் வளர்பிறை தசமி (விஜயதசமி) முதல் ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசை வரை மொத்தம் 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படு கிறது. இவ்விரத முறையைப் பின்பற்றியே உமையம்மை சிவபெருமானின் இடப்பாகத்தைப் பெற்றார். இதனால் இறைவன் மாதொரு பாகன், அர்த்த நாரீஸ்வரர் என்ற திருநாமம் பெற்றார்.
இவ்விரத முறையில் அதிரசம் என்ற பொருள் பிரசாதமாகப் படைக்கப்படுகிறது. இவ்வழிபாட்டில் நோன்பு கயிறு வைத்து வழிபடப்பட்டு இறுதியில் எல்லோர் கையிலும் அணிவிக்கப்படுகிறது. ஆண்கள், பெண்கள் என எல்லோரும் இவ்விரதமுறையைக் கடைப்பிடிக்கின்றனர்.
ஒரு சிலர் இவ்விரதத்தை கடைசி ஒன்பது,ஏழு, ஐந்து, மூன்று நாட்களும், ஒரு சிலர் ஐப்பசி அமாவாசை அன்று மட்டும் கடைப் பிடிக்கின்றனர். கோவில்களிலும், வீடுகளிலும் கேதார கௌரி வழிபாடு நடத்தப்படுகிறது.
இவ்விரதமுறையை மேற்கொள்வதால் நீண்ட நாட்கள் தம்பதியர் ஒற்றுமையாக வாழ்தல், நல்ல வாழ்கைத்துணை, நற்புத்திரர், நல்ல எண்ணங்கள் ஈடேறுதல் ஆகியவை கிடைக்கும்.
பாபாங்குசா ஏகாதசி
ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி பாபாங்குசா ஏகாதசி என்றழைக்கப்படுகிறது. இது பாவங்களைப் போக்கும் கங்கையில் நீராடிய பலனைக் கொடுக்கும். நோய், பசிப்பிணி நீங்கும். நிம்மதி நிலைக்கும்.
நம்முடைய பாவங்களை அகற்றும் அங்குசம் போன்றது. கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்கள், யாகங்கள், உயர்ந்த தான- தர்மங்கள் முதலானவற்றால் என்ன பலன் கிடைக்குமோ, அந்த பலன்கள் அனைத்தும் இந்த ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பதால் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், எம பயத்தில் இருந்து விடுபடுவார்கள், நரக வேதனை அவர்களை வாட்டாது என்று புராணங்கள் கூறுகின்றன.
இந்திரா ஏகாதசி
ஐப்பசி மாத தேய்பிறை ஏகாதசி இந்திரா என்று அழைக்கப்படுகிறது. இது மூதாதையர்களுக்கு நற்கதி அளிக்கும். இவ்விரத நாளில் பால் அருந்தக் கூடாது.
மாதந்தோறும் வரும் ஏகாதசிகள் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. அவற்றுள் ஐப்பசி மாத ஏகாதசிகள் சிறப்பு வாய்ந்தவையாகும். இந்த மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசியை ‘இந்திர ஏகாதசி’ என்று அழைக்கிறார்கள்.
ஐப்பசி மாதத்தை சிறப்பு செய்தவர்கள் யார் யார்?
இம்மாதத்தில் திருமூல நாயனார், நின்றசீர் நெடுமாற நாயனார், இடங்கழி நாயனார், சக்தி நாயனார், பூசலார் நாயனார், ஐயடிகள் காடவர்கோன் ஆகிய நாயன்மார்களின் குருபூஜை நடைபெறுகிறது.
பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய ஆழ்வார்களின் ஜெயந்தியும் இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் ஐப்பசி மாதத்தில் விரதமுறையை கடைபிடித்தும், பண்டிகைகளை உற்சாக கொண்டாடியும் வாழ்வில் மகிழ்ச்சி பெறுவோம்..