சண்டிகர்:
அரியானா மாநிலத்தை சேர்ந்த மல்யுத்த வீரர் யோகேஸ்வர் தத், 2012 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு வெங்கலப்பதக்கம் வென்றவர் ஆவார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அரியானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடந்த போது பா.ஜ.க.வில் இணைந்தார். உடனடியாக அவருக்கு பரோடா சட்டசபை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அவர் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீ கிருஷ்ண கோடாவிடம் சுமார் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார்.
கிருஷ்ண கோடா அண்மையில் மரணம் அடைந்ததால் பரோடா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இடைத்தேர்தலிலும் பா.ஜ.க. வேட்பாளராக யோகேஸ்வர் தத் நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் இந்து ராஜ் நார்வல் என்பவர் போட்டியிட்டார்.
ஆனால் இந்த முறையும் வீரர் தத்துக்கு வெற்றி கிடைக்க வில்லை. இந்த முறை அவர் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.
ஒலிம்பிக்கில் மூன்றாவது இடம் பிடித்த தத்துக்கு தேர்தலில், மீண்டும் இரண்டாம் இடம்.
– பா. பாரதி