ஆஸ்திரேலியா முழுவதும் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 50 கோடி விலங்குகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பல்லுயிர் வல்லுநரும், சிட்னி பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான கிறிஸ் டிக்மேன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள கிறிஸ் டிக்மேன், “ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் காடுகள் அழிக்கப்படுவதால் விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து 2007ம் ஆண்டு இயற்கைக்கான உலகளாவிய நிதியத்துக்காக (WWF) தான் மற்ற ஆய்வாளர்களுடன் இணைந்து எழுதிய அறிக்கையை அடிப்படையாக கொண்டே இந்த எண்ணிக்கையை கணக்கிட்டுள்ளது. ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 17.5 பாலூட்டிகள், 20.7 பறவைகள், 129.5 ஊர்வன ஆகியவை வாழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ள அந்த அறிக்கையின் தரவை தற்போது காட்டுத்தீ ஏற்பட்டுள்ள பரப்புக்கு கணக்கீடு செய்வதன் மூலம் இந்த எண்ணிக்கை கிடைத்துள்ளது.
நியூ சௌத் வேல்ஸின் குறிப்பிட்ட மூன்று மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பாதிப்புகளை அடிப்படையாக கொண்டு பார்க்கும்போது, அநேகமாக 480 மில்லியன் பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன போன்றவை தீவிபத்தால் பாதிக்கப்பட்டிருக்கும். பெரிய விலங்கினங்களான கங்காரு, ஈமு மற்றும் பல்வேறு வகையான பறவைகள் ஆகியவை தங்களை நோக்கி தீ வருவதை பார்த்து சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றிருக்கக் கூடும். அதிக தூரம் இடம்பெயர முடியாத மற்றும் காடுகளை மட்டுமே சார்ந்து வாழும் சிறிய உயிரிகள் இந்த காட்டுத்தீயில் சிக்கி என்ன ஆகியிருக்கும் என்று நான் அஞ்சுகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள யார்க் பல்கலைக்கழகத்தின் சூழலியல் நிபுணர் கொலின் பீல், ”இந்த எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டு இருக்கலாம். நான் பெரும்பாலும் கவனம் செலுத்தும் ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்படும் தீ விபத்துகளில் சிக்கி சில பறவைகள் உயிரிழப்பது உண்மைதான். ஆனால், தீ பரவுவதை உணர்ந்தவுடனேயே அங்கிருந்து உடனுக்குடன் பறந்து செல்லும் திறனை பறவைகள் பெற்றுள்ளன. இதே சூழ்நிலை ஆஸ்திரேலியாவுக்கும் கண்டிப்பாக பொருந்த கூடியதே. இந்த எண்ணிக்கைகளுக்கு ஒரு வரம்பு உள்ளது. நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அடிப்படையாக கொண்டே இந்த எண்ணிக்கை மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது காட்டுத்தீ நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்திலிருந்து அருகிலுள்ள விக்டோரியாவுக்கும் பரவிவிட்டது.
பேராசிரியர் கிறிஸின் மதிப்பீட்டில் வெறும் மூன்று மில்லியன் ஹெக்டேர்கள் நிலப்பகுதி மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால், தற்போது காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட நிலப்பகுதி அதை எப்போதோ விஞ்சிட்டது. எனவே, தற்போது வெளிவந்துள்ள மதிப்பீடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதை விட அதிகமான விலங்கினங்கள் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்திருக்கலாம். இந்த எண்ணிக்கை வெறும் தோராயமான கணக்கீடு என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.