டில்லி
தமது கட்சிக்கு மத்திய அரசு ஒரே ஒரு அமைச்சர் பதவியை ஒதுக்குவதாக கூறியதற்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 277 இடங்கள் தேவை என்னும் நிலையில் தற்போது பாஜக அதை விட அதிகம் தொகுதிகளை வென்றுள்ளது. இருப்பினும் கூட்டணி கட்சிகள் அமைச்சரவையில் இடம் பெறலாம் என காத்திருந்தன.
இந்நிலையில் பீகார் மாநில ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு அமைச்சரவையில் பாஜக ஒரே ஒரு இடம் மட்டும் ஒதுக்கி உள்ளது. அக்கட்சியின் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் தனது கட்சியின் சார்பில் அமைச்சர்களாக பதவி அளிக்க 8 பேருக்கு பரிந்துரை செய்துள்ளார். ஆனால் ஒரே ஒரு இடம் அளிக்கப்பட்டதால் நிதிஷ் குமார் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.
இது குறித்து நிதிஷ்குமார், “பாஜக கூட்டணியில் எங்கள் கட்சியினர் பல தொகுதிகளில் வென்றுள்ளனர். ஆனால் பாஜக தொகுதி அடிப்படையில் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிக்காமல் பெயருக்கு ஒரே ஒரு அமைச்சர் இடத்தை அளித்துள்ளது நாங்கள் இன்னமும் பாஜக கூட்டணியில் தொடர்ந்தாலும் இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.” என கூறி உள்ளார்.