புதுடெல்லி: ஐஐடி போன்ற மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் கட்டண மானியம் ரத்து செய்யப்படலாம் என்றும், பதிலாக தகுதியுள்ள மாணாக்கர்களின் வங்கிக் கணக்கிற்கே பணம் சென்றடையும் வகையில் திட்டங்கள் உருவாகலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தேசிய அளவிலான கூட்டு-நிதியளிப்பு தளத்தை உருவாக்கும் திட்டமும் பரிசீலினையில் உள்ளதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு குடும்பமும் குறைந்தபட்சம் ஒரு மாணாக்கருக்கு உதவிசெய்வதை வலியுறுத்தும் “ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கு கற்பியுங்கள்” என்ற தேசியளவிலான இயக்கம் அரசு சார்பில் நடத்தப்படவுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படும் நிதியானது, தேசிய மின்னணு தளத்தில் கொண்டுசெல்லப்பட்டு, உதவும் ஆர்வமுள்ள நபர்களை மாணாக்கர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இணைக்கும் செயல்பாடு மேற்கொள்ளப்படும்.
இந்தவகையில், சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் ரூ.25000 கோடி திரட்டப்பட திட்டமிடப்பட்டுள்ளது.