டில்லி

பிரபல கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தகாத உறவு உள்ளதாக அவர் மனைவி புகார் கூறி உள்ளார்.

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி கடந்த 2014 ஆம் வருடம் ஹாஸின் ஜஹான் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.   இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.   இவர் தனது கணவருக்கு ஒரு மொபைல் ஃபோன் பரிசாக வழங்கி உள்ளார்.  இருவரும் மிகவும் ஒற்றுமையாக வாழ்வதாக ரசிகர்கள் நம்பி வந்தனர்.   இந்நிலையில் ஹாஸின் ஜஹான் தனது முகநூல் பக்கத்தில் கணவரைப் பற்றி பதிந்துள்ளது அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

அவர் தனது முகநூல் பக்கத்தில் பல பெண்களின் புகைப்படங்களை பதிந்து அவர்களுடன் தனது கணவருக்கு தகாத உறவு உள்ளதாக கூறி உள்ளார்.   முகமது ஷமி பல பெண்களுடன் ஜாலியாக சாட்டிங் செய்துள்ளதையும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிந்துள்ளார்.   தான் தனது கணவருக்கு பரிசாக வழங்கிய மொபைல் போன் மூலம் ஷபிக்கு பல  பெண்களின் தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளதாக கூறி உள்ளார்.

அத்துடன் கடந்த 2 ஆண்டுகளாக முகமது ஷமி மற்றும் அவருடைய குடும்பத்தினர் தன்னை கடும் சித்திரவதை செய்ததாகவும்,  தம்மை கொலை செய்ய முயற்சித்ததாகவும் தெரிவித்துள்ளார்.    முகமது ஷமியிடம் இந்தப் பெண்களுடன் அவருக்கு உள்ள தகாத உறவு பற்றி கேட்டதற்கு தன்னை அடித்து உதைத்ததாக கூறி உள்ளார்.

முகமது ஷமி மீது விரைவில் காவல் துறையில் புகார் அளிக்க உள்ளதாக ஜகான் தெரிவித்துள்ளார்.    இந்த பரபரப்பு புகார்களை பற்றி முகமது  ஷமியிடம் பலரும் கேள்விகள் கேட்ட வண்ணம் உள்ளனர்.    ஆனால் இதுவரை முகமது ஷமி இது குறித்து ஒரு கருத்தும் கூறவில்லை.