மெல்போர்ன்: ஒரு உணர்ச்சிகரமான சூழலில் தனது முதல் டெஸ்ட்டில் களமிறங்கிய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், ஆஸ்திரேலியாவின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் ஆதிக்கத்திற்கு உதவியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் போட்டிகள் துவங்கும் முன்னதாக பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவரின் தந்தை இந்தியாவில் இறந்துவிட்டார். ஆனால், அதற்காக அவர் அனுமதி கிடைத்தும்கூட, பாதியிலேயே நாடு திரும்பவில்லை. அங்கேயே தங்கியிருந்து தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டார்.
அதேசமயம், அவருக்கு ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் ஆடுவதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் முகமது ஷமி காயமடைய, முகமது சிராஜுக்கு அதிர்ஷ்டம் அடித்தது.
தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய அவர், இன்றைய ஆட்டத்தில் உணவு இடைவேளைக்குப் பிறகே பந்துவீசும் வாய்ப்பைப் பெற்றார். ஆனாலும், 48 ரன்களை அடித்து மிரட்டிக் கொண்டிருந்த மார்னஸ் லபுஷேனை அவுட்டாக்கி அசத்தினார்.
பின்னர், மற்றொரு முக்கியமான கட்டத்தில் கேமரான் கிரீனை LBW முறையில் அவுட்டாக்கினார். இதனால், இந்திய அணிக்கு எதிர்பார்த்த திருப்பம் கிடைத்தது. இல்லையெனில், ஆஸ்திரேலிய அணி 200 ரன்களை எளிதாக தாண்டிச் சென்றிருக்கும்.
இன்று மொத்தமாக 15 ஓவர்களை வீசிய அவர், 4 மெயிடன்களை வீசி, 40 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.