சியோனி, மத்தியப் பிரதேசம்.
மத்திய பிரதேசம் சியோனி மாவட்டத்தில் வசிக்கும் ஒருவரை புலியிடம் இருந்து சண்டை இட்டு அவர் வளர்த்த நாய் காப்பாற்றி உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சியோனி மாவட்டத்தில் பரஸ்பானி என்னும் சிற்றூர் உள்ளது. வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த சிற்றூரில் பஞ்சம் கஜ்பா என்னும் 22 வயது இளைஞர் வசித்து வந்தார். அவரும் அவர் சகோதரரும் காலைக் கடனை கழிக்க காட்டுக்குள் சென்றுள்ளனர். கஜ்பா வளர்க்கும் நாய் அவர்களை பின் தொடர்ந்தது. இருவரும் சற்று தூரம் தள்ளி இருந்தனர்.
கஜ்பா பல் துலக்க ஒரு குச்சியை மரத்தில் இருந்து ஒடித்துள்ளார். அப்போது கஜ்பா மீது ஒரு புலி வேகமாக பாய்ந்துள்ளது. அவர் மிகவும் பயந்துள்ளார். அவர் மீது ஏறி நின்ற புலி அவருடைய கழுத்தை கடிக்க முயன்றுள்ளது. அருகில் இருந்து கஜ்பா வளர்த்த நாய் வேகமாக புலி மீது பாய்ந்துள்ளது. அதனால் புலி அவரை விட்டு விட்டு பின் வாங்கியது. அந்த புலியை நோக்கி நாய் குரைத்தபடி இருந்தது.
அந்த சத்தம் கேட்டு கஜ்பாவின் சகோதரர் மற்றும் கிராம வாசிகள் ஓடி வந்தனர். ஆட்கள் வருவதைக் கண்ட புலி காட்டுக்குள் ஓடி விட்டது. கஜ்பாவுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டிருந்தது. அதனால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விவரம் அறிந்து அங்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரி சுலியா, அந்த வனம் புலிகள் சரணாலயம் என்பதால் மக்கள் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளார்.