டில்லி:

ச்சநீதி மன்றத்தில் நடைபெற்று வந்த ஹாதியா தொடர்பான லக் ஜிகாத் வழக்கில் உச்சநீதி மன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

அதில், கேரள நீதி மன்றம் ஹாதியா திருமணம் செல்லாது என்று அறிவித்த உத்தரவை ரத்து செய்து, ஹாதியாவின் திருமணம் செல்லும் என தீர்ப்பு வழங்கி உள்ளது.

கேரளாவில் இந்து மதத்தை சேர்ந்த அகிலா என்ற  இளம்பெண்ணை இஸ்லாமியராக  மதம் மாற்றி திருமணம் செய்துகொண்டதாக, அப்பெண்ணின் தந்தை  தொடரப்பட்ட வழக்கில், ஹாதியாவின்  திருமணத்தை கேரள ஐகோர்ட்டு ரத்து செய்தது.

இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் ஹாதியா சார்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

கேரளாவில், இந்து பெண்களை காதலித்து மதம் மாற்றி இஸ்லாமிய அமைப்பினர், ‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில் திருமணம் செய்து வருவதாக கூறப்படுகிறது. அதன்படியே தனது மகள் அகிலா, ஹாதியாவாக மதம் மாற்றப்பட்டு திருமணம் செய்துள்ளதாக, ஷபின் ஜஹான் என்பவர் மீது அகிலாவின் தந்தை கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கேரள  உயர்நீதிமன்றம் அவர்களின் திருமணத்தை ரத்து செய்தது.

இதனை எதிர்த்து ஜஹான் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யபட்டது. இந்த வழக்கை  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணை நடத்தியது.

ஏற்கனவே கடந்த முறைநடைபெற்ற விசாரணையின்போது,  ஹாதியா தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்,  “தனக்கு திருமணம் ஆகிவிட்டதாக ஹாதியா தெரிவிக்கையில் அதனை செல்லாது என அறிவிக்க நீதிமன்றத்தால் எப்படி முடியும். வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ஹாதியா மேஜர் என்னும் பட்சத்தில் அவர் தான் யாருடன் செல்ல வேண்டும் என்பதை தான் முடிவு செய்ய வேண்டும்.

ஹாதியாவின் முடிவில் கேள்வியெழுப்ப யாருக்கும் உரிமை இல்லை. அதேப்போல் ஹதியாவின் முடிவில் தலையிட நீதிமன்றத்துக்கும் உரிமை இல்லை. எனவே ஹாதியாவின் திருமண நோக்கம் குறித்து தேசிய புலனாய்வு பிரிவு (NIA) தலையிட இயலாது” என தெரிவித்தது.

அதைதொடர்ந்து ஹாதியா “நான் இஸ்லாமிய பெண், இஸ்லாமிய பெண்ணாகவே என் கணவருடன் வாழ விரும்புகின்றேன்” என்று பிப்ரவரி 20-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தார். அதைத்தொடர்ந்த கடந்த மாதம் 22ந்தேதி நடைபெற்ற விசாரணை யின்போது, வழக்கின் தீர்ப்பு  மார்ச் 8ந்தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

அதன்படி இன்று ஹாதியா வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது நீதிமன்றம், கேரள உயர்நீதி மன்றத்தின் உத்தரவை ரத்து செய்வதாகவும், ஹாதியாவின் திருமணம் செல்லும் என்றும் உத்தரவிட்டுள்ளது.