திருப்பதி

புத்தாண்டு தினத்தன்று சாமி தரிசனம் செய்ய திருப்பதி கோவிலில் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் குவிந்துள்ளனர்.

File pic

திருப்பதி கோவிலில் மார்கழி மாதம் ஏராளமான பக்தர்கள் கூடுவது வழக்கமாகும்.  நேற்று முன் தினம் அதாவது டிசம்பர் 31 ஆம் தேதி அன்று கொரோனா கட்டுப்பாடுகளையொட்டி மொத்தம் 21,263 பேர் தரிசனம் செய்துள்ளனர்.  இவர்களில் 8,629 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.  அன்று ரூ.2.83 கோடி உண்டியல் காணிக்கை வந்துள்ளது.

புத்தாண்டு அன்று பலர் ஏழுமலையானைத் தரிசனம் செய்வது வழக்கமாகும்.   நேற்று முன்பதிவு செய்த பக்தர்களில் சிலர் நேர்த்திக்கடனாக அலிபிரி மலை வழியாக திருமலைக்குச் சென்றனர். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து பலர் கால்நடையாகத் திருப்பதிக்கு வந்தனர்.

இந்த பக்தர்களில் சிலர் தரிசன டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளாததால், திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட வில்லை. இவர்கள் அலிபிரி மலையடிவாரத்தில் உள்ள பாதாள மண்டபம் ஏழுமலையான் கோயிலில் சுவாமியைத் தரிசித்து விட்டு, தேங்காய் உடைத்து வழிபாடு செய்து அவரவர் ஊர்களுக்குத் திரும்பிச் சென்றனர்.

மேலும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஏராளமான பிரமுகர்கள் திருப்பதிக்கு வந்தனர்.  அவ்வாறு ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆந்திர மாநில துணை முதல்வர் நாராயணசாமி, தமிழக அமைச்சர் காந்தி, ஆந்திர மாநில கொறடா செ. பாஸ்கர் ரெட்டி, குஜராத் அமைச்சர் ஜித்தேந்திர சவுத்ரி, நடிகர் சாய் குமார், நடிகை கங்கணா ரணாவத் இயக்குநர் அணில் ராவல் ராவுபுடி உட்பட பலர் நேற்று காலை வி ஐ பி பிரேக் சமயத்தில் சுவாமியைத் தரிசித்துக்கொண்டனர்.