சென்னை

போதைப் பொருள் கடத்தலில் தேடப்பட்டு வந்து தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக் குக்கு லுக் அவுட் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்குப் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப்பொருட்கள், தேங்காய் பவுடர் மற்றும் ‘ஹெல்த் மிக்ஸ்’ (சத்து மாவு) பாக்கெட்டுகளில் மறைத்து வைத்துக் கடத்தப்படுவதாக அந்த நாடுகளைச் சேர்ந்த சுங்க இலாகா அதிகாரிகள், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறைக்கு ரகசியத் தகவல் கொடுத்தனர்.

கடந்த 4 மாதங்களாக டில்லி காவல்துறை சிறப்புப் பிரிவு மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அடங்கிய தனிப்படை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது. அப்போது இந்த கடத்தல் கும்பல், மேற்கு டில்லியில் உள்ள கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் இருந்து செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த 15-ந்தேதி அதிரடியாக அங்கு நுழைந்த காவல்துறையினர் அங்கிருந்த சென்னையைச் சேர்ந்த முகேஷ் (வயது 33), முஜிபுர் ரகுமான் (34), விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக் (34) ஆகிய 3 பேரைக் கைது செய்து அவர்களிடம் இருந்து 50 கிலோ போதையூட்டும் வேதிப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தைச் சேர்ந்த மேலும் சிலர் இதன் பின்னணியில் இருப்பதும், கடந்த 3 ஆண்டுகளில் 45 முறை போதைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு அவர்கள் அனுப்பியுள்ளதும் தெரியவந்தது. இதுவரை சுமார் 3,500 கிலோ வேதிப்பொருளைக் கடத்தியதன் மூலம் சுமார் ரூ.2,000 கோடி வரை இவர்கள் சம்பாதித்திருக்கலாம் என்று தெரியவந்தது.

இந்த கடத்தல் கும்பலுக்கு மூளையாகச் செயல்பட்டது தமிழ் திரைத்துறை தயாரிப்பாளரும், முன்னாள் தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக், நடிகர் மைதீன், அரசியல் பிரமுகர் சலீம் எனத் தகவல் வெளியானது. இதனால்  தி.மு.க.வில் இருந்து ஜாபர் சாதிக் நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

ஜாபர் சாதிக் தற்போது தலைமறைவாக இருப்பதால் அவரையும் வழக்கில் தொடர்புடையதாக மேலும் சிலரையும்  போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தொடர்ந்து தேடி வருகிறார்கள். டில்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்த சம்மனைச் சென்னை சாந்தோம் அருணாச்சலம் தெருவில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் ஒட்டினர்.

நேற்று முன் தினம் சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர்சாதிக் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவலர் சோதனை நடத்தி அந்த வீட்டுக்கு ‘சீல்’ வைத்தனர். தொடர்ந்து ஜாபர் சாதிக்கை காவல்துறை தேடி வருகிறது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக லுக் அவுட் நோட்டீஸை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கொடுத்துள்ளனர். மேலும் அனைத்து விமான நிலையங்களுக்கும் இந்த லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.