டில்லி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மனம் தளரக்கூடாது என கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறி உள்ளார்
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடும் தோல்வியை தழுவியதால் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆயினும் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் தற்போது ராகுலை தவிர தலைமைப் பதவிக்கு தகுதியான நபர் இல்லாததால் அவரே தலைவராக தொடர வேண்டும் என கூறி உல்ளனர். ஆயினும் ராகுல் காந்தி ராஜினாமா செய்வதில் பிடிவாதம் காட்டி வருகிறார்.
பல காங்கிரஸ் தலைவர்கள் ராகுலின் முடிவை மாற்ற அவரை சந்திக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர் யாரையும் சந்திக்க மறுத்துள்ளார். இந்நிலையில் சென்ற வாரம் கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமியை ராகுல் காந்தி சந்தித்தது ஆச்சரியம் அளித்துள்ளது. அவர்கள் இருவரும் சுமார் 30 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்துள்ளனர்.
குமாரசாமி தன்னுடன் உரையாடுபவர்களை சகோதரர் என அழைப்பது வழக்கமாகும். இந்த விவரம் அரசியல் உலகில் உள்ள அனைவரும் அறிந்ததாகும். ராகுல் காந்தியை அவர் சார் என அழைத்துப் பேசிக் கொண்டுள்ளார். அப்போது ராகுல் காந்தி தன்னை சார் என அழைக்க வேண்டாம் எனவும் சகோதரர் என அழைக்கலாம் எனவும் கூறி உள்ளார். அத்துடன் தம்மை அவர் சகோதரராக ஏன் ஏற்கவில்லை எனவும் கேட்டுள்ளார்.
இதன் பிறகு ராகுல் காந்தியை குமாரசாமி சகோதரர் என அழைக்க தொடங்கி உள்ளார். அப்போது குமாரசாமி, “சகோதரர் ராகுல் காந்தி மனம் தளரக் கூடாது. எங்கள் கட்சி பலமுறை 3-4 தொகுதிகளில் மட்டும் வென்றுள்ளது. எனது தந்தை பிரதமர் பதவியில் இருந்து விலகியவுடன் நடந்த தேர்தலில் ஹாசன் தொகுதியில் தோல்வி அடைந்தார். நானும் பல தேர்தலில் தோற்றவன் தான். நாங்கள் அப்படி இருந்தும் முன்னடைவு பெற்றுள்ளோம்.
காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உங்கள் குடும்பத்தை தவிர வேறு எந்த தலைவரின் பேச்சையும் கேட்க மாட்டார்கள். இது காங்கிரஸ் கலாசாரம் ஆகி விட்டது. இதனால் நீங்கள் தான் கட்சியை மீண்டும் முன்னுக்கு அழைத்து வர முயல வேண்டும். உங்கள் தலைமை இல்லை என்றால் காங்கிரஸ் கட்சி என்பதே இல்லாமல் போய் விடும். தேசிய அளவில் தோல்வி அடைந்த காங்கிரஸ் பல மாநிலங்களில் வலிவுடன் உள்ளது. தேர்தல் தோல்விக்காக மனதை தளர விடுவது தவறு” என அறிவுரை அளித்துள்ளார்.