பெங்களூரு

ரசின் மும்மொழி திட்ட வரைவு மூலம் இந்தியை திணிப்பதற்க்கு கன்னட மொழி ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு சமீபத்தில்  தேசிய கல்விக் கொள்கை 2019 என்னும் ஒரு வரைவை அளித்தது.   அதன்படி அனைத்து மாநிலங்களிலும் மும்மொழி பாடத்திட்டம் கட்டாயம் ஆக்கப்பட உள்ளது.   குறிப்பாக இந்தி பேசாத மாநிலங்களில் அம்மாநில மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தி மொழியும் கற்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.   அத்துடன் இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் மாநில மொழி ஒன்றை கற்க வேண்டியது அவசியமாகி உள்ளது.

இந்த வரைவு திட்டத்துக்கு தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.   இதன் மூலம் இந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக கூறப்பட்டுள்ளது.   தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.    கன்னட மொழி ஆர்வலர்கள் பலரும் இந்த வரைவு திட்டத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கன்னட கிரககார கூடம் என்னும் அமைப்பை சார்ந்த கனேஷ் சேத்தன், “தற்போது இந்த வரைவு திட்டத்தின் மூலம் இந்தி மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.   இதன் மூலம் இந்தியை ஆட்சி மொழி ஆக்கும் முயற்சி நடைபெறுகிறது.   பலர் நினைப்பது போல் இந்தி தேசிய மொழி இல்லை. அப்படி இருக்க அரசு ஏன் இந்தியை திணிக்கிறது என்பது புரியவில்லை.

இந்தி திணிப்பை எதிர்த்து நாங்கள் ஏற்கனவே பல மாநிலங்களில் போராட்டம் நடத்தி உள்ளோம்.  கடந்த வருடம் இதற்காக 30 மொழிகளின் பிரதிநிதிகள் கொண்ட மாநாடு ஒன்றை நடத்தினோம்.   எங்களுக்கு அனைத்து மொழிகளையும் சமமாக நடத்த வேண்டும் என்பதே குறிக்கோளாகும். ” என தெரிவித்துள்ளார்.

இந்திய இளைஞர் காங்கிரஸ் பிரசார பொறுப்பாளர் ஸ்ரீவத்சா, “கர்நாடகாவில் உள்ள அனைத்து மக்களவை உறுப்பினர்களும் இந்த புதிய கல்வி வரைவு திட்டத்தை தீவிரமாக எதிர்க்க வேண்டும்.   இந்தி திணிப்பை தென்னகம் மட்டுமின்றி இந்தி பேசாத அனைத்து மாநிலங்களும் எதிர்க்க வேண்டும்.  பிரதம்ர் மோடி 8 ஆவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் அலுவல் மொழி ஆக்கப்படவேண்டும்” என டிவிட்டரில் பதிந்துள்ளார்.

இது போல பலரும் எதிர்ப்பு தெரிவிக்கவே மத்திய அரசு இதை வெறும் வரைவு மட்டுமே சட்டம் அல்ல என தெரிவித்துள்ளது.   பெங்களூருவில் மத்திய  அமைச்சர் சதானந்த கவுடா, “பிரதமர் தனது முதல் சந்திப்பில் மாநில மொழிகள் மற்றும் மாநில விவகாரங்களுக்கு முன்னுரிமை கொடுப்படும் என தெரிவித்துள்ளார்.  எனவே இந்தி திணிப்புக்கு இடமில்லை” என தெரிவித்துள்ளார்.