ராஞ்சி:  ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி,  மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் ஜெஎம்எம் அரசு, மாஃபியாக்களின் அடிமை என விமர்சனம் செய்தார்.

ஜார்க்கண்டில் நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணியிலிருந்து பாஜக ஆட்சியைப் கைப்பற்ற முயல்கிறது. ஆட்சி தக்க வைத்துக்கொள்ள ஜேஎம்எம் கூட்டணிகட்சிகள் முயல்கின்றன. ஆளும் இண்டியா கூட்டணியும், தேசிய ஜனநாயக கூட்டணியும் நேரடியாக மோதுகின்றன.  இதைத்தொடர்ந்து, மாற்று கட்சியினரை தங்களது கட்சிகளுக்கு இழுக்கும் போட்டி கடுமையாக உள்ளது.  அங்கு அனல் பறக்கும் பிரசாரங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று அங்கு பிரசாரம் செய்து வருகிறார்.  ஜார்க்கண்ட் மாநிலம் கர்வாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றி ய  பிரதமர் நரேந்திர மோடி,   ஜார்க்கண்ட் அரசு மாஃபியாக்களின் அடிமையாகிவிட்டதாகவும், “இந்த (ஜேஎம்எம்-ஆர்ஜேடி-காங்கிரஸ்) மூன்று அரசியல் கட்சிகளும் ஊடுருவல்காரர்களை ஆதரிக்கின்றன.. அவர்களை ஜார்க்கண்ட் முழுவதும் குடியேறச் செய்கிறார்கள்…” என   விமர்சித்துள்ளார்.

ஜார்க்கண்டின் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுக்காவும் விவசாயிகளின் தொழில்களை வலுப்படுத்தவும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அரசு முட்டுக்கட்டை போட்டபோதும், மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது.

நாங்கள் ஆட்சி அமைத்தால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரட்டை வேகத்தில் வளர்ச்சி அடையும். ஜார்க்கண்டில் மத்திய அரசின் வீட்டு வசதித் திட்டம் என்ன ஆனது என்று நீங்கள் மாநில அரசிடம் கேட்க வேண்டும். நாடு முழுவதும் 3 கோடி வீடுகள் கட்டப்படும் என்று மக்களவை தேர்தலின் போது வாக்குறுதி அளித்தேன். தற்போது ஜார்க்கண்டுக்கு 21 லட்சம் வீடுகளை கட்டித் தர பாஜக தீர்மானித்துள்ளது. ஒவ்வொரு ஏழைக்கும் வீடு என்பதே பாஜகவின் உத்தரவாதம்.

ஜார்க்கண்டில் அரசாங்கத்தை அமைத்தால், 3 லட்சம் அரசுப் பணிகளை வெளிப்படைத்தன்மையுடன் நிரப்புவோம்.

சமீபகாலமாக வதந்திகளைப் பரப்புவது பெரிய வணிகமாக உள்ளது. நீங்கள் அதனை நம்ப வேண்டாம்.

ஜார்க்கண்ட் அரசு மாஃபியாக்களின் அடிமையாகிவிட்டது. மக்களவை வலுக்கட்டாயமாக இடம்பெயர வைக்கின்றனர்.

உங்களின் ஒவ்வொரு வாக்கும் காங்கிரஸ்-ஜேஎம்எம் கூட்டணியால் உருவாக்கப்பட்ட மாஃபியா அமைப்பை பாதிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

ஆளும் கூட்டணியில் உள்ள மூன்று கட்சிகளும் ஊடுருவல்காரர்களை ஆதரிக்கின்றனர்.

ஜார்கண்ட் முழுவதிலும் அவர்களை குடியேற வைக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.