ஐதராபாத்: இந்திய அணியில் விராத் கோலி மற்றும் முகமது ஷமி இல்லாத நிலையில், எஞ்சியப் போட்டிகளின்போது அணியில் புதிய ஹீரோ உருவாகலாம் என்று கணித்துள்ளார் முன்னாள் வீரர் விவிஎஸ் லஷ்மண்.
அடிலெய்டில் நடைபெற்ற முதல் பகலிரவு டெஸ்ட்டில், இந்திய அணி மோசமாக தோல்வியடைந்தது. இந்நிலையில் விராத் கோலி நாடு திரும்பிவிட்டார். முகமது ஷமியும் காயமடைந்துவிட்டார்.
இந்நிலையில் லஷ்மண் கூறியுள்ளதாவது, “ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கால்பகுதிதான் முடிவடைந்துள்ளது. இன்னும் 3 போட்டிகள் ஆடப்பட வேண்டும்.
கடினமான சூழலில், இந்திய வீரர்கள் எப்படி தங்களின் திறமையை வெளிப்படுத்தி ஈடுகொடுக்கப் போகிறார்கள் என்பதற்கு இதுவொரு பெரிய சோதனை.
இந்த தருணம்தான், இந்திய அணிக்கான புதிய ஹீரோவை அடையாளம் காணும் தருணமாகும். வீரர்கள் அனைவரும் எழுச்சிபெற வேண்டிய கட்டாயமுள்ளது. அடிலெய்டில் கிடைத்த கசப்பான அனுபவத்தை மறக்க வேண்டிய நேரமிது.
இந்திய அணியின் இந்த இக்கட்டான சூழலில், புதிய ஹீரோ ஒருவர் உருவெடுப்பார் என்று நம்புகிறோம். போட்டியை இந்திய அணி புத்துணர்ச்சியுடன் துவங்க வேண்டும்” என்றுள்ளார் லஷ்மண்.