மும்பை: கடந்த 1983 உலகக்கோப்பை போட்டியைப் பொறுத்தவரை, கோப்பையை தலைக்கு மேலே தூக்கி, பால்கனிக்கு கீழே குழுமியிருந்த ஆயிரக்கணக்கான இந்திய அணி ரசிகர்களுக்கு அன்றைய கேப்டன் கபில் தேவ் காட்டியதுதான் தன் நினைவில் என்றும் நிறைந்திருக்கும் ஒரு பசுமையான அற்புத நினைவு என்று கூறியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் கவாஸ்கர்.

கவாஸ்கர் கூறியுள்ளதாவது, “கடந்த 1983ம் ஆண்டு உலகக்கோப்பையை நாங்கள் வென்றது ஏதோ எதிர்பாராமல் நிகழ்ந்த அதிர்ஷ்டமல்ல. எங்களின் சிறிய ரன் எண்ணிக்கையை வைத்து நாங்கள் வென்றது பெரிய விஷயம்தான்.

விவியன் ரிச்சர்ட்ஸ் விக்கெட்டை வீழ்த்தியதும், கோப்பையை வெல்லலாம் என்ற நம்பிக்கைப் பிறந்தது. அந்த ஆட்டத்தில் நான் ஸ்லிப் பொசிஷனில் நின்றதால்தான் வெஸ்ட் இண்டீஸ் தோற்றது என்ற கருத்துக் குறித்து அந்த அணியின் அன்றைய கேப்டன் கிளைவ் லாயிடிடம்தான் கேட்க வேண்டும்.

இப்போதைய இந்திய அணி பல நல்ல திறமையான வீரர்களைக் கொண்டுள்ளது. மேலும் அவர்களுக்கு நல்ல தன்னம்பிக்கையும் உள்ளது. மேற்கிந்திய கிரிக்கெட் அணி இந்த உலகக்கோப்பையில் எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவே செயல்படும்” என்றார்.