ம்பால்

ணிப்பூர் மாநிலத்தில் 5 மாவட்டங்களில் இணைய சேவைக்கான தடை வரும் 20 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆட்சி நடத்து வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் குகி, மெய்தி இன மக்களுக்கிடையே கலவரம் வெடித்ததில் 200-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் குடியேறினர்.

மணிப்பூரில் இயல்புநிலை படிப்படியாக திரும்பி வந்த நிலையில், அங்கு மீண்டும் வன்முறை சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. ஆயுதம் ஏந்திய குழுக்கள் டிரோன்கள், சிறிய விமானங்கள், வெடி மருந்துகள் நிரப்பிய ராக்கெட் உள்ளிட்டவற்றால், தாக்குதல் நடத்தி வருகின்றன.

கடந்த 7-ந்தேதி மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் நடந்த வன்முறை சம்பவங்களில் 8 பேர் கொல்லப்பட்டு 12 பேர் காயமடைந்தனர். எனவே மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டக் கோரியும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கவர்னர் மாளிகை, தலைமைச் செயலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு மணிப்பூர் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களில் மாணவர்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 60 பேர் காயமடைந்தனர். வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மணிப்பூரில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இணைய சேவைகள் 10-ந்தேதி தொடங்கி 15-ந்தேதி வரை தடை செய்யப்பட்டது.

தற்போது மணிப்பூரில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சூழலை கருத்தில் கொண்டு, அங்கு இணைய சேவைக்கான தடை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மேற்கு இம்பால், கிழக்கு இம்பால், தவுபால், பிஸ்னுபூர் மற்றும் கக்சிங் ஆகிய 5 மாவட்டங்களில் வரும் 20-ந்தேதி வரை இணைய சேவைக்கான தடை நீடிக்கும் என மாநில உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.