கல்யாண்
நாதுராம் கோட்சே உயிருடன் இருந்தால் அவரையும் பாஜக தேர்தலில் நிறுத்தி இருக்கும் என மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கூறி உள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலில் போட்டி இடுகின்றன. இரு கட்சிகளும் தேர்தல் பிரசார பணிகளில் மும்முரமாக இறங்கி உள்ளன. நேற்று மகாராஷ்டிர மாநிலம் பிவண்டி மற்றும் கல்யாண் தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த பேரணியை தேசிய வாத காங்கிரஸ் நடத்தியது.
இந்த பேரணியில் மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் தனது உரையில், “பாஜக தேச விரோத செயல் செய்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்து வருகிறது. சாத்வி பிரக்ஞா தாகுருக்கு போபால் தொகுதியில் போட்டியிடுவது மூலம் தீவிரவாதத்தை பாஜக ஆதரிக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதை எல்லாம் பார்க்கும் போது மகாத்மா காந்தியை கொன்ற நாதுரம் கோட்சே உயிருடன் இருந்தால் அவருக்கும் பாஜக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்து வேட்பாளர் ஆக்கி இருக்கும் என தோன்றுகிறது. அத்துடன் டாக்டர் நரேந்திர டபோல்கர், எம் எம் கல்பிர்கி, கோவிந்த் பன்சாரா மற்றும் கவுரி லங்கேஷ் ஆகியோரை கொன்றவர்களுக்கும் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பளிக்கும்.
தியாகி ஹேமந்த் கர்கரேவை ஒரு துரோகி என சாத்வி பிரக்ஞா கூறுகிறார். ஆனால் தேவேந்திர பட்நாவிஸ் மற்றும் மோடி உள்ளிட்டோர் ராணுவ வீரர்களின் தியாகங்களை கூறி வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் ஹேமந்த் கர்கரே வின் தியாகத்தை கொச்சைப்படுத்திய அந்த பெண்மணியை கட்சி யை விட்டு நீக்கி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் பாஜக தான் ஒரு தீவிரவாத ஆதரவு கட்சி என்பதை காட்டி விட்டது.
அந்த பெண்மணியின் பேச்சு கர்கரேவை மட்டுமின்றி இந்த நாட்டையே இழிவு படுத்தும் பேச்சு ஆகும். அதற்கு நாடெங்கும் இருந்து எதிர்ப்பு கிளம்பியதும் சாத்வி மன்னிப்பு கேட்டுளார். ஆனால் அவரை கட்சியில் இருந்து நீக்காத பாஜக அது அவர் சொந்த கருத்து எனக் கூறி சமாளிக்கிறது” என கூறி உள்ளார்.