டில்லி
பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் தாம்பெருமை அடைவதாக சாத்வி பிரக்ஞா தாகுர் கூறி உள்ளார்.
மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 8 வருடம் சிறையில் இருந்த சாத்வி பிரக்ஞா தாகுர் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இவர் பாஜகவின் போபால் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
இரு தினங்களுக்கு முன்பு தீவிரவாதிகளால் 26/11 மும்பை தாக்குதலில் கொல்லப்பட்ட ஹேமந்த் கர்கரே தமது சாபத்தினால் மரணம் அடைந்ததாக தெரிவித்தார். இதற்கு நாடெங்கும் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதை ஒட்டி சாத்வி பிரக்ஞா தாகுர் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
தற்போது ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சாத்வி, “பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு எதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்? அதற்கு பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும். நான் அதற்காக பெருமை அடைந்துள்ளேன். ராமர் கோவில் கட்டும் இடத்தில் இருந்த குப்பையான பாபர் மசூதி அகற்றப்பட்டுள்ளது.
கடந்த 70 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை பாருங்கள். நமது கோவில்களும் அவர்கள் ஆட்சியில் பாதுகாப்புடன் இல்லை. நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பாப்ரி மசூதியை இடித்து நமது நாட்டின் சுயமரியாதையை காத்துள்ளோம். இங்கு ராமர் கோவில் கட்டாமல் நாட்டில் வேறு எங்கு கட்ட முடியும்?
மக்கள் என்றும் என்னுடன் உள்ளனர். எனது வேட்பாளர் அறிவிப்பு அவர்களுக்கு ஊக்கம் அளித்துள்ளது. எனது பெயர் அறிவிக்கப்பட்டதுமே எனது வெற்றி உறுதி ஆகி விட்டதாக என்னை சந்திக்கும் அனைவரும் தெரிவித்து வருகின்றனர். ” என கூறி உள்ளார். சாத்வியின் பாபர் மசூதி இடிப்பு கருத்து அடுத்த சர்ச்சையை துவக்கி உள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.