டில்லி:
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் டில்லியில் நடந்தது. பணமதிப்பிழப்பு அமல்படுத்தப்பட்டு ஒரு ஆண்டு முடிந்த பின்னரும் பணத்தை எண்ணிக் கொண்டு இருப்பதாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில், ‘‘ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஏன்? திருப்பதி உண்டியல் எண்ணுவோரிடம் செல்லக் கூடாது. உங்களை விட அவர்கள் பணத்தை வேகமாக எண்ணுவார்கள்’’ என்றார்.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், ‘‘நாட்டில் உள்ள கோடி கணக்கான இளைஞர்கள் சோர்ந்து போயுள்ளனர். அவர்களால் முன்னேறி செல்வதற்கான வழியை காண முடியவில்லை. எங்கிருந்து வேலை கிடைக்கும் என்று அவர்களுக்கு தெரியவில்லை. விவசாயிகளின் உற்பத்திக்கு எப்போது உரிய விலை கிடைக்கும். வழி தெரியாமல் சிக்கி தவிக்கும் இந்த நாட்டிற்கு காங்கிரஸ் தான் சிறந்த வழியை காட்டும் என்று இதயப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
காங்கிரஸ் கட்சிக்கும், இந்த நாட்டிற்கும் முன்னோக்கிய பாதையை காட்டுவதற்காக தான் இந்த கூட்டம் நடக்கிறது. இது எதிர்காலம் மற்றும் மாற்றத்தை நோக்கியதாகும். மூத்தவர்களின் அனுபவத்துடன் இளைஞர்கள் காங்கிரஸை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும். இரு தரப்பையும் இணைத்து புதிய வழியை காட்டுவது தான் எனது பணி’’ என்றார்.