ரவுண்ட்ஸ்பாய்:

இன்னிக்கு ஒட்டுமொத்த தமிழகத்தோட பார்வை.. ஏன் இந்தியாவோட பார்வையே, சென்னை கிண்டி கவர்னர் மாளிகையை நோக்கித்தான் இருக்கு. குறிப்பா சொன்னா மரத்துல இருக்கிற குருவியோட கழுத்தையே அர்ஜூனன் குறிவச்ச மாதிரி, கவர்னர் வித்யாசாகரோட வாயையே எல்லாரும் பார்த்துக்கிட்டு இருக்காங்க.

சசிகலாவை கூப்பிடுவாரா இல்லே, ஓ.பி.எஸ்ஸே தொடரட்டும்னு விட்டுருவாரா.. மெஜாரிட்டி நிரூபிக்கச் சொல்வாரா… ஒண்ணுமே தெரியல.

சின்னம்மாவும் ஏதேதோ சொல்லிப்பார்த்துட்டாரு.  “கவர்னர் ஜனநாயகத்தை காப்பார்”னு கெஞ்சலா ஆரம்பிச்சி, “ஒரு கட்டத்துக்கு மேல பொறுமையா இருக்கமாட்டோம்”னு மிரட்டற அளவுக்கு ஏதேதோ பேசிப் பார்த்துட்டார். ஆனா அந்த மனுசன் அசர்றதா இல்லே.

தன்னை முதல்வராக்க கவர்னர் அழைக்கறதா இருந்தா என்ன வேணும்னாலும் செய்ய சின்னம்மா தயாரா இருக்காங்க. அவங்களே  பெருமையா சொன்ன மாதிரி, சென்னை பெங்களூர் ஜெயிலை எல்லாம் பார்த்தவங்க அவங்க.

பட்.. கவர்னர் வித்யாசாகர் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சாத்தானே?

இந்த விசயத்தில சசிகலாவுக்கு உதவ என்ன செய்யலாம்னு ரோசிச்சேன். அரசியல்வாதிங்க மாதிரி நானும் பெருசா திங்க் பண்ணேன்.

பட்டுன்னு ஐடியா வந்துச்சு.

அரசியல்னால ஜோசியம்தானே!

நேத்துதானே கவர்னர் வித்யாசாருக்கு பொறந்த டே. அதான் 13ம் தேதி.

இந்த தேதியில பிறந்தவங்க குண நலன் எப்படி இருக்கும்.. என்ன மாதிரி முடிவு எடுப்பாங்கன்னு தெரிஞ்சா, அதுக்கேத்தமாதிரி மூவ் பண்ணலாம்லே.. (தெரிஞ்சிகிட்டு சசிகலா மூவ் பண்ணாலும் சரி, ஓ.பி.எஸ். முந்திக்கிட்டாலும் சரி.. என்னைப் பொறுத்தவரை தமிழ்நாட்டுக்கு நிரந்தர (!) முதல்வர் வேணும். அவ்ளோதான்!)

சரி.. வித்யாசாரோட குண நலன் எப்படி இருக்கும்?

13ம் தேதி பிறந்தவர்களின் குணம நலம்னு  கூகுளை தட்டினேன்.

இதோ வித்யாசாகரோட குணநலன்களும் நான் சொல்லும் பரிகாரங்களும்.

“நான்கு திசைகள், நான்கு வேதங்கள், நான்கு உபாயங்கள் என  நான்காம் எண்ணுக்கு தனித்தன்மைகள்  உண்டு. 4,13,22,31ம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய கிரகம் ராகு.  ராகுவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள் என்பதால் அதிக பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.  பயம் என்பது இவர்களுக்கு இல்லை. எவரது மிரட்டலையும் பொருட்படுத்த மாட்டார்கள்.

அதனால, மிரட்டல் வேலை எல்லாம் வேணாம். அனுசரிச்சு போங்க.

நாலாம் எண்காரர்கள் மிக அழுத்தமானவர்கள். அதிகம் பேச மாட்டார்கள். பேசினால் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுதான். மற்றவர்களுக்கு பணிந்தோ, நயமாகவோ பேசத் தெரியாது இவர்களுக்கு.

கோவப்டாம பேசுங்க. அவரு கொஞ்சம் ஏக்கு மாக்கா பேசினாலும் கண்டுகாதீங்க.

அடுத்தவர்களின் அந்தஸ்தையோ, பதவியையோ பற்றி எல்லாம் இந்த நான்காம் எண் காரர்கள் கவலைப்படமாட்டார்கள்.  மனதில் பட்டதை வெளிப்டையாக பேசிவிடுவார்கள்.

ஸோ.. நாங்க மெட்ராஸ் ஜெயில், பெங்களூரு ஜெயில்லாம் பார்த்தவங்கன்னு உங்க டூர் கதையை எடுத்து விடாதீங்க.. நோ யூஸ்!

இந்த நாலாம் எண் காரர்களை,  புரிந்து கொள்பவர்களால் மட்டுமே இவர்களை அனுசரித்துச் செல்ல முடியும்.

உங்க வீட்டுக்காரர் நடராஜனை அழைச்சுட்டு போங்க. அனுசரிச்சு போறதில அவரை மாதிரி ஒருத்தர் இருக்க முடியுமா?

நாலாம் எண் காரர்களுக்கு புகழிலோ, பொருளிலோ அவ்வளவு ஆசை இருக்காது. எல்லோரும் தன் கருத்துக்களை புரிந்து கொண்டு பாராட்ட வேண்டும் என்று எதிர் பார்ப்பார்கள்.

அப்பாடா.. ஒரு லூப் ஹோல் கிடைச்சிருச்சு. நம்ம கட்சி அமைச்சருங்க ரெண்டு பேரை அழைச்சுட்டு போங்க. அவங்க புகழ்ற புகழ்ச்சியிலே கவர்னருக்கு மயக்கம வந்திரும். அப்படியே அவரோட கைநாட்டை ஒரு பேப்பர்ல வச்சி  எடுத்துக்கிட்டு வந்திடலாம்.

காரசாரமான உணவு வகைகள் இவர்களுக்கு பிடிக்கும்.

நம்ம தஞ்சவூரு காராசேவு ரெண்டு கிலோ வாங்கிட்டு போங்க. அதோட மொறுமொறுப்பு, காரத்துக்கு மயங்கிருவாரு கவர்னர்.

இந்த எண் காரர்களுக்கு வயிறு சம்பந்தமான வியாதிகளும், வாயுத் தொல்லைகளும் இருக்கும். சிறுநீரகக் கோளாறு, வறட்டு இருமல், சளி, சுவாச கோளாறு போன்றவைகளால்  அடிக்கடி பாதிப்பு உண்டாகும்.

இந்த நோய்களை தீர்க்குற டாக்டருங்களை கூடவே அழைச்சுட்டு போங்க. உங்களோட பாசத்துல கவர்னர் கரைஞ்சுடுவார்.

காதல் உணர்வு நிரம்ப உள்ளவர். மனைவி மீது மிக அன்பாக இருப்பார்கள்

நல்லதா போச்சு. அவரோட ஆகவே மனைவி கிட்ட சொல்லி சீக்கிரம் ஆட்சி அமைக்க அழைக்கச்சொல்லலாம்.

நான்காம் எண்ணில் பிறந்தவர்களுக்கு பணம் எப்போதுமே பற்றாக்குறையாகத்தான் இருக்கும். தாராள மனம் கொண்டவர்கள் என்பதால் யாராவது உதவி கேட்டால் கையில் இருப்பதை கொடுத்து விட்டு திண்டாடுவார்கள்.

இந்த மேட்டர நல்லா புடிச்சுக்குங்க. ஏற்கெனவே இந்த நாலாம் எண் காரங்க தலைக்கணம் புடிச்சவங்கன்னு பார்த்தோம். அதனால நேரடியா பண உதவி செய்யறதா சொல்லாதீங்க. கோபப்படுவாங்க. காரியம் கெட்டுரும். அவங்க உற்றார் உறவினர்கள்ல கஷ்டப்படறவங்களுக்கு உதவறதா சொல்லுங்க. மனசு நெகிழ்ந்து வழிக்கு வரலாம்.

நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் முரட்டு சுபாவம் கொண்டவர்கள் என்பதால் இவரக்ளுக்கு நண்பர்கள் அமைவது சற்றுக் கடினமான காரியமாகும் என்றாலும், தாராள குணம் இருப்பதால் சில நண்பர்கள் அமைய வாய்ப்பு உண்டு. 5,8 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களிடம் நண்பர்களாக இருப்பார்கள். அவர்களிடம் மிகுந்த பாசத்துடன் இந்த நான்காம் எண் காரர்கள் நடந்துகொள்வார்கள்.

அப்புறம் என்ன.. கவர்னர் வித்யாசாகரோட நண்பர்கள் யார்னு கண்டுபிடிச்சு கூவத்தூர் ஓட்டலுக்கு கொண்டுவாங்க.  கவர்னர் நேரே நம்ம (!) ஓட்டலுக்கே வந்து பதவி பிரமாணம் செஞ்சி வச்சுருவாரு!

எப்டியோ.. சீக்கிரம் சி.எம். ஆயிடுங்க  சின்னம்மா!  நீங்க அப்பப்போ அழுகுறதை பார்க்க சகிக்கலை.

இப்படிக்கு.. உங்கள் அன்புள்ள ரவுண்ட்ஸ் பாய்.