நொய்டா: ஜெய்பீ குழுமத்திலிருந்து தங்களுக்கான வீடுகள் இன்னும் ஒதுக்கப்படாததால், தற்காலிகமாகவேனும் வங்கிகளில் செலுத்த வேண்டிய மாதாந்திர தவணைத் தொகையை நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென கோரியுள்ளனர் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு பிரிவினர்.
சுமார் 22000 பேர், ஜெய்பீ குழுமத்திடமிருந்து தங்களுக்கான வீடுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இவர்களில் ஒரு பெரும்பிரிவினர், அந்தக் குழுமம் கூட்டிய குறைதீர் சந்திப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மோசமான நிலைக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளே காரணம் என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த குறைதீர்ப்பு கூட்டமெல்லாம் வெறும் கண்துடைப்பு என்றும் கூறியுள்ளனர்.
ஜெய்பீ குழுமத்தின் ஜெய்பீ இன்ஃப்ராடெக் நிறுவனம்தான் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுகிறது. இது தற்போது பெரிய கடன் பிரச்சினையில் சிக்கியுள்ளதால், பணம் கட்டியவர்களுக்கு சரியான நேரத்தில், அவர்களுக்கான வீடுகளை ஒப்படைக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
– மதுரை மாயாண்டி