டெல்லி:  மத்தியஅரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக சில மாநில விவசாயிகள் போராடி வரும் நிலையில், வேளாண் சட்டங்கள் அமல்படுத்துவதை மாநில அரசுகளிடம் விட்டுவிடுங்கள் என பிரதமர் மோடிக்கு, பாஜக மூத்த தலைவர்  சுப்பிரமணியன் சுவாமி கடிதம் மூலம் ஆலோசனை வழங்கி உள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் வடமாநில விவசாயிகள் 74வது நாளாக போராடி வருகின்றனர். இன்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் உச்சநீதிமன்றத்தின் இடைக்கல தடை காரணமாக, வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை 18 மாதங்களுக்கு மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளது. ஆனால், விவசாயிகள் வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றே ஆக வேண்டும் என பிடிவாதமாக போராடி வருகின்றனர்.

இந்த நிலையில், வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் முடிவை மாநில அரசுகளின் விருப்பத்துக்கு விட்டுவிடுங்கள் என்று  மோடிக்கு சுப்பிரமணியசாமி கடிதம் எழுதி உள்ளார்.

அவரது கடிதத்தில், வேளாண் துறையில் சீர்த்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று விரும்புகிறவர்களில் நானும் ஒருவர். அதனால்தான் இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு வந்தபோது, அதற்கு ஆதரவாகவே வாக்களித்தேன்.

3 வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் முடிவை அந்தந்த மாநில அரசுகளின் விருப்பத்துக்கே விட்டுவிட வேண்டும் மேலும் இந்த சட்டங்களை நடை முறைப்படுத்த விரும்பும் மாநிலங்களுக்கு அந்த சட்டத்தின் பலன்களையும் மறுக்கக்கூடாது.  சில மாநிலங்கள், குறிப்பாக பஞ்சாப் மாநிலம், நல்ல காரணங்களுக் காகவோ அல்லது கெட்ட காரணங்களுக்காவோ இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்த விரும்பவில்லை. அதனால் அந்த மாநில அரசுகளிடம் இதை நடைமுறைப்படுத்தலாமா வேண்டாமா என்பதை அவர்களிடமே  விட்டு விடலாம்.

மேலும், இந்த வேளாண் சட்டங்களுக்காக 3 விரிவாக்க வேண்டும் என்பது எனது ஆலோசனை… அதன்படி, முதலாவதாக,

இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்புவதாக எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கும் மாநிலங்களில்,  அமல்படுத்தாத மாநிலங்கள் இந்த சட்டங்கள் மூலம் கிடைக்கும் பலன்களை அனுப்பவிப்பதில் இருந்து வெளியேற்றப்படும் வகையில், அவர்களுக்கு சுதந்திரம் கொடுத்து விடலாம்,

ஒவ்வொரு மாநிலமும், குறைந்தபட்ச ஆதார விலை வழங்க நிரந்தரமான தகுதி பெறும் வகையில் உறுதித்தன்மை இருக்க வேண்டும்,

விவசாயகிள் உணவு தானியங்களை வேளாண் வர்த்தகம் மட்டும் பிரதானமாக இருப்பவர்களிடம் மட்டுமே  வாங்க வேண்டும்.  பிற வர்த்தகம் செய்து கொண்டே வேளாண் வர்த்தகம் செய்பவர்கள், வர்த்தக நலன்கள் உடைய வியாபாரிகள் போன்றோரிடம் வேளாண் தானியங்கள் வாங்குவதை கட்டுப்படுத்த வேண்டும்

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக  போராடும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த விதிகள் சட்டத்துடன் சேர்க்கப்பட்டால, விவசாயகிளின் போராட்டம் முடிவுக்கு வந்துவிடும் என்று தெரிவித்துள்ளதுடன்,  விவசாயிகள் போராட்டத்துக்குள் இடையூறு செய்பவர்கள், தேசவிரோத சக்திகள் என்பதில் சந்தேகமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணியசாமியின் ஆலோசனையை மோடி அரசு ஏற்குமா? விவசாயிகளின் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வருமா?