தராபாத்

தெலுங்கானா இண்டர்மீடியட் தேர்வில் தேர்ச்சி பெறாததற்காக தற்கொலை செய்துக் கொண்ட மாணவி தேர்ச்சி பெற்றதாக பிறகு அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த வருடம் இண்டர்மீடியட் தேர்வில் 9.43 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளனர். இந்த தேர்வு முடிவு கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி வெளியானது. இதில் அப்போது 5.60 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில் தெலுங்கு பாடத்தில் தேர்ச்சி அடையாத மாணவர்களில் 23 பேர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். மேலும் இருவர் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றபட்டுள்ளனர்.

அந்த முடிவு அறிவிப்புக்குப் பிறகு முடிவுகளில் பல தவறுகள் நேர்ந்துள்ளதாக கண்டறியப்பட்டது. இதை ஒட்டி 3.82 லட்சம் விடைத்தாள்களை இண்டர்மீடியட் ஆணையம் மீண்டும் திருத்த உத்தரவிட்டது. இதில் பல மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக மே 27 ஆம் தேதி வெளியான புதிய அறிவிப்பில் தெரிய வந்துள்ளது. தேர்ச்சி பெறாததால் தற்கொலை செய்துக் கொண்ட மாணவிகளில் இருவர் தற்போது தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் அமுத்லா அனாமிகா என்னும் காந்தி நகரை சேர்ந்த ஒரு மாணவி தெலுங்கு பாடத்தில் 20 மதிப்பெண் பெற்றதால் தேர்ச்சி அடையாதவராக அறிவிக்கபட்டுள்ளார். அவர் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தற்போதைய அறிவிப்பின்படி அவர் தெலுங்கில் 48 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். அனாமிகாவின் குடும்பத்தினருக்கு இந்த முடிவு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

இது குறித்து அனாமிகாவின் சகோதரி உதயா, “நான் காந்தி நகர் காவல் நிலையத்தில் தெலுங்கானா அரசு இண்டர்மீடியட் கல்வி வாரியத்தின் மீது புகார் அளிக்க உள்ளேன். இவ்வாறு முடிவு தவறாக அறிவிக்கப்பட்டது அவர்களுடைய தவறாகும். இது ஒன்று அல்லது இரண்டு மதிப்பெண்கள் இல்லை.   28 மதிப்பெண்ணை குறைத்து அறிவிக்க்கும் அளவுக்கு அவர்கள் எப்படி தவறு செய்வார்கள்?

அனாமிகா தேசிய சாரணர் படையில் சேர்ந்து டில்லியில் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் தற்கொலை எங்களை துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. இதற்கு முழுக்க முழுக்க தெலுங்கானா அரசு இண்டர்மீடியட் கல்வ் வாரியத்தின் தவறாகும்.” என சோகத்துடன் தெரிவித்துள்ளார்.