இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற கெளதம் கம்பீர் பாஜக-வில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டு வந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் தனக்கு கிரிக்கெட் மிகப்பெரிய கடமை காத்திருப்பதாகவும் கூறினார்.
இதனையடுத்து கடந்த மாதம் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளருக்கான நேர்முகத் தேர்வில் பங்கேற்றார்.
இந்த நிலையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்திய அணி சமீபத்தில் 2024 டி20 உலகக் கோப்பையை வென்றது. அந்த மாபெரும் வெற்றியுடன் முந்தைய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விடை பெற்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது கெளதம் கம்பீர் அந்தப் பொறுப்பை ஏற்றிருக்கும் நிலையில் 2025 சாம்பியன்ஸ் டிராபி, 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகிய முக்கிய தொடர்களை அவர் எதிர்கொள்ள இருக்கிறார்.