புதுடெல்லி: டெல்லியில் மெட்ரோ ரயில் மற்றும் நகரப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு இலவசப் பயண சலுகையை வழங்க டெல்லியின் கெஜ்ரிவால் அரசு திட்டமிடுகிறது.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ஒரு நாளில் சுமார் 30 லட்சம் மக்கள் மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்துகிறார்கள் என்றும், ஒரு நாளில் சுமார் 42 லட்சம் மக்கள் டெல்லி பேருந்து சேவையைப் பயன்படுத்துகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில்தான் இத்தகைய சேவைகளைப் பயன்படுத்தும் பெண்களுக்கு, கட்டணமில்லாத இலவசப் பயண சலுகையை வழங்க டெல்லி அரசு திட்டமிட்டு வருகிறது. இதுதொடர்பாக டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகத்தை, டெல்லி அரசின் போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கெலாட் சந்தித்துள்ளார்.
அதேசமயம், இந்த இரண்டு சேவைகளையும் ஆண்களோடு ஒப்பிடுகையில், பெண்கள் குறைந்தளவே பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சரியாக எவ்வளவு பெண்கள் ஒருநாளைக்கு இந்த சேவைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை ஒரு சர்வே மூலம் தெளிவாக கண்டறியாத வரை, ஏற்படவுள்ள செலவினங்களை கணக்கிடுவது கடினமே என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.