ராலேகான் சித்தி, மகாராஷ்டிரா
தேர்தலில் நல்லவர்கள் வெற்றி பெற தேர்தல் சின்னங்களை ஒழிக்க வேண்டும் என பிரபல சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் ராலேகான் சித்தி என்னும் ஊரை சேர்ந்த அன்னா ஹசாரே ஒரு புகழ் பெற்ற சமூக ஆர்வலர் ஆவார். இவர் சமூக சீர்திருத்தங்களுக்காக காந்திய முறையில் உண்ணா விரத போராட்டம் நடத்தி உள்ளார். இவருடைய போராட்டத்தின் விளைவாக லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா அமைக்க அரசு ஒப்புக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நேற்று ராலேகான் சித்தியில் செய்தியாளர்களிடம் அன்னா ஹசாரே, “நம்முடைய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என கூறப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் மற்றும் அதன் சின்னங்கள் பற்றி சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை . அதாவது அரசியலமைப்பு சட்டம் தேர்தலில் தனிப்பட்ட நபர்களைத்தான் அங்கீகரிக்கிறது.
நமது நாட்டில் முதல் தேர்தல் 1952 ல் நடந்தது. அந்த சமயத்தில் தற்போது உள்ளது போல தொழில்நுட்ப வளர்ச்சி இல்லை. அதனால் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும் வழக்கம் தொடங்கியது. அந்த வழக்கம் தொழில் நுட்பம் நன்கு முன்னேறிய காலமான இன்றும் பின்பற்றப்படுகிறது. தற்போதுள்ள நிலையில் சின்னங்கள் தேவை இல்லை.
இது மின்னணு யுகம். அதனால் சின்னம் உபயோகிப்பதை தவிர்க்கலாம். அதற்கு பதில் வேட்பாளரின் பெயர் மற்றும் புகைப்பட்ம் மட்டுமே இருந்தால் போதுமானதாக இருக்கும். இவ்வாறு தேர்தல் சின்னங்கள் ஒழிக்கப்படுவதன் மூலம் நல்லவர்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது” என தெரிவித்தார்.