பியூனாஸ் ஏர்ஸ்: சமீபத்தில் மரணமடைந்த உலகப் புகழ்பெற்ற அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மாரடோனாவின் உடலுக்கு, அந்நாட்டு அதிபர் மாளிகையில் இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.
தற்போது, அவரின் உடலுக்கு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பெரும்பாலானோர் அர்ஜெண்டினா கால்பந்து அணியின் ஜெர்சி அணிந்துள்ளனர்.
அர்ஜெண்டினா அதிபர் ஆல்பெர்டோ பெர்ணான்டஸ் கூறியுள்ளதாவது, “இந்த நாட்டின் அடையாளமாக இருந்தவர் மாரடோனா. கடந்த 1986ம் ஆண்டு, இங்கிருந்துதான் அவர் நாட்டிற்கு உலகக்கோப்பையை வென்று தந்தார்.
பின்னர், கடந்த 1990ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தோற்றபோதும், இங்கிருந்துதான் மக்களுக்கு ஆறுதல் அளித்தார். அர்ஜெண்டினா மக்கள் அனைவரும் அவருக்கு விடை கொடுக்க வேண்டுமென விரும்புகிறேன். அதற்கான தகுதிக்கு உரியவர் அவர்” என்று உருக்கமாக பேசியுள்ளார்.
மாரடோனாவின் போஸ்ட் மார்டம் அறிக்கையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.