சீரடி
சீரடி சாய்பாபா கோவில் குறித்து எழுந்த சர்ச்சை காரணமாக நடந்த முழு அடைப்பு முடிந்த பிறகும் பதட்டம் நீடித்து வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம் சீரடியில் சாய்பாபாவின் கோவில் அமைந்துள்ளது. நாடுமுழுவதும் இருந்து இங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்தக் கோவிலின் விழா கடந்த 2018 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டபோது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உட்பட ஒரு கோடிக்கும் அதிகமானோர் அங்கு வந்திருந்தனர்.
தற்போது சாய்பாபாவின் பிறப்பிடம் சீரடி அல்ல, பாத்ரி எனக் கூறி சிவசேனா பிரச்சாரம் செய்து வருகிறது. பாத்ரியில் சாய்பாபாவுக்குச் சிறிய கோயில் ஒன்று உள்ளது. மகாராஷ்டிர முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்ற பிறகு பாத்ரியில் உள்ள சாய்பாபா கோயிலின் வளர்ச்சிக்காக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார்.
எனவே சாய்பாபா பக்தர்கள் சீரடி கோயிலுக்கு எதிராக சிவசேனா செயல்படுவதாகப் புகார் கூறியுள்ளனர். உத்தவ் தாக்கரேவின் செயலுக்கு சீரடி அறக்கட்டளையும் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
சிவசேனா சாய்பாபா கோயிலுக்கு எதிராகச் செயல்படுவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. அதைப் போல் சிவசேனாவின் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியும், இது தேவையற்ற சர்ச்சை எனக் கருத்து தெரிவித்துள்ளது.
சாய்பாபா கோயில் அமைந்துள்ள சீரடியில் நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. அதையொட்டி நகர் முழுவதும் முழு அடைப்பு நடந்தது.. ஆயினும் இன்றும் சீரடி பகுதியில் கடும் பதட்டம் நிலவி வருகிறது. சாய்பாபா கோவில் திறக்கப்பட்டிருந்த போதும் பக்தர்கள் அங்கு அதிக அளவில் வராததால் நகர் வெறிச்சோடி உள்ளது.