புவனேஸ்வர்
அரே கிருஷ்ணா என கூறப்படும் இஸ்கான் இயக்கத்தால் நடத்தப்படும் மாணவர் மதிய உணவு திட்டத்தில் முட்டை சேர்க்கப்பட உள்ளது.
உலகப் புகழ்பெற்ற இயக்கமான இஸ்கான் இயக்கம் இந்தியாவின் பல மாநிலங்களில் அட்சய பாத்திரா என்னும் பெயரில் மாணவர் மதிய உணவு திட்டத்தை நடத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் 1,76,000 பள்ளிகளின் மாணவர்களுக்கு மதிய உணவு அளிக்கப்படுகிறது. இஸ்க்கான் என்பது மிகவும் ஆசாரமான இயக்கம் என்பதால் இந்த திட்டத்தின் மூலம் சைவ உணவுகள் மட்டுமே அளிக்கப்படுகின்றது.
இந்த உணவில் மாமிசம், மீன்கள் மற்றும் முட்டை ஆகியவைகள் சேர்க்கப்படாமல் இருந்தது. இந்த இயக்கம் கர்நாடக மாநிலத்திலும் இதே அட்சய பாத்திரா திட்டத்தை நடத்தி வருகிறது. அம்மாநிலத்தில் வழங்கப்படும் உணவுகளில் வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவைகளை சேர்க்க அரசு விடுத்த வேண்டுகோளை இயக்கம் மறுத்துள்ளது. இது இஸ்க்கானின் ஆன்மீக வழக்கத்துக்கு எதிரானது என காரணம் கூறப்பட்டது.
இந்நிலையில் மாணவர்களுக்கு அதிக ஊட்டச் சத்து தேவை என்பதால் இந்த உணவுடன் முட்டையை அளிக்க வேண்டும் என அரசு கேட்டுக் கொண்டது. ஆனால் முழுக்க சைவமான இஸ்க்கான் இயக்கம் அதற்கு மறுப்பு தெரிவித்தது. அதை ஒட்டி உணவில் முட்டையை சேர்க்க நடவடிக்கை எடுக்க ஒரிசா மாநில அரசு ஆலோசனை செய்து வந்தது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள், “ஒரிசா மாநிலத்தில் அசைவ உணவு உண்பவர்கள் அதிகம் உள்ளனர். ஆனால் அட்சய பாத்திரா திட்டத்தின்படி மாணவர்களுக்கு சைவ உணவு மட்டுமே அளிக்கப்படுகிறது. இதை பல மாணவர்கள் விரும்புவதில்லை. மேலும் அங்கன் வாடி குழந்தைகளுக்கு வாரத்துக்கு 5 முட்டைகள் வழங்கப்படுகின்றன” என தெரிவித்துள்ளனர்.
அதை ஒட்டி ஒரிசா மாநில அரசு அளித்துள்ள உத்தரவின்படி மாணவர்களுக்கு இந்த உணவில் வாரத்துக்கு இரு வேகவைத்த முட்டை அளிக்கப்பட உள்ளது. அந்த முட்டைகளை பள்ளி நிர்வாகம் வாங்கி அதை வேகவைத்து மாணவர்களுக்கு தனியாக அளிக்க உள்ளது. இதன்படி ஒரிசாவில் 1980 பள்ளிகளில் உள்ள 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இனி மதிய உணவில் முட்டை அளிக்கப்பட உள்ளது.