லண்டன்: நியூசிலாந்து அணியுடன் நடைபெற்று முடிந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங் பலவீனங்கள் வெட்டவெளிச்சமாக தென்பட்டாலும், அந்தக் குறைகள் அனைத்தும் விரைவில் சரிசெய்யப்படும் என்றும், அதுகுறித்து கவலைகொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார் ரவீந்திர ஜடேஜா.
பந்து வீச்சிற்கு சற்று சாதகமாக இருந்த ஓவல் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் பயிற்சி ஆட்டத்தில், இந்திய அணி 39.2 ஓவர்களில், வெறும் 179 ரன்களை மட்டுமே எடுத்து சரணடைந்தது.
இந்த ஆட்டத்தில், 50 பந்துகளில் 54 ரன்களை எடுத்த ஜடேஜாவும், 37 பந்துகளில் 30 ரன்களை எடுத்த ஹர்திக் பாண்டியாவுமே சிறந்த பங்களிப்பை அளித்த பேட்ஸ்மேன்கள். இதுகுறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜடேஜா, “வெறும் ஒரு இன்னிங்ஸ் அல்லது ஒரு ஆட்டத்தை வைத்து ஒரு அணியை கணிப்பது தவறான விஷயம். இது எங்களின் முதல் ஆட்டம். விரைவில் அனைத்தும் சரிசெய்யப்படும்.
இங்கிலாந்தில் எப்போதுமே சற்று நிலைமை கடினமானது. எடுத்தவுடன் தட்டையான விக்கெட்டில் விளையாடுவதென்பது சவாலானதுதான். எனவே, பேட்டிங் துறையின் குறைபாடுகள் விரைவில் நிவர்த்தி செய்யப்படும்” என்றார்.