புதுடெல்லி:
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று டைம்ஸ் நவ், சி-வோட்டர் கருத்து கணிப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு வரும் 27-ம் தேதி முதல் ஏப்ரல் 29-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன்படி அசாமில் 3, மேற்கு வங்கத்தில் 8, கட்டங்களாகவும், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளாவில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாகவும் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்நிலையில், டைம்ஸ் நவ் மற்றும் சி-வோட்டர் ஆகியவை இணைந்து தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பை வெளியிட்டது.
அதில், தமிழ்நாட்டில் திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்றும், மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு 158 இடங்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த கருத்துக்கணிப்பில், ஆளும் அதிமுக, பாஜக கூட்டணிக்கு 65 இடங்கள் கிடைக்கும் என்று குறிப்ப்பிடப்பட்டுள்ளது.
முதல்வர் பதவிக்கான கருத்து கணிப்பில், திமுக தலைவர் ஸ்டாலின் 38% மக்களின் ஆதரவுடன் முதலிடத்திலும், எடப்பாடி பழனிசாமிக்கு 31% ஆதரவுடனும் இரண்டாம் இடத்திலும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு 7.4% ஆதரவுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
கேரளாவில் மொத்தம் உள்ள140 தொகுதிகளில் 82 இடங்களில்வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணி ஆட்சியை தக்கவைக்கும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 56 இடங்கள் கிடைக்கும். பாஜகவுக்கு ஒரு இடம் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாமை பொறுத்தவரை, மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் பாஜக, அசாம் கண பரிஷத் கூட்டணி 67 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும். காங்கிரஸ், ஏஐயுடிஎப் கூட்டணிக்கு 57 இடங்களும் பிற கட்சிகளுக்கு 2 இடங்களும் கிடைக்கும் என்றும் அந்த கருத்துக்கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30-ல் 18 இடங்களில் வெற்றிபெற்று பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும். கடந்த முறை வெற்றி பெற்ற காங்கிரஸுக்கு 12 இடங்கள் மட்டுமே கிடைக்கும். இவ்வாறு கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.