இந்தக் கட்டுரை சினிமா மற்றும் நிஜத்திற்குள்ள ஒற்றுமையை புரிந்துக் கொள்ள உதவும் . இதனை விசித்ரா என்பவர் தன் பிளாக் பக்கத்தில் எழுதியுள்ளார். அதனை தெரிந்துக் கொள்வோம்.
முகவுரை:
மலேசிய வாழ் தமிழரின் பார்வையில் கபாலியை புரிந்துக் கொள்ள இந்தக் கட்டுரை நிச்சயம் உதவும்.
குறிப்பு
1: மலேசியத் தமிழர்களைப் பற்றித் தெரிந்திராதவர்கள் கண்டிப்பாகக் கபாலி பார்க்கும் முன் இதனைப் படிக்கவும்.
2. மலேசியரைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து ஏற்கனவே படத்தைப் பார்த்திருந்தால், இதனைப் படித்தபிறகு மீண்டும் ஒருமுறை கபாலி பார்க்கவும்.
3. நீங்கள் ஒரு மலேசியராய் இருந்தால், படத்தைப் பார்த்தப்பின் இதனைப் படிக்கவும்.
கடந்த சில தலைமுறை மலேசிய இந்தியர்கள் யாரும் இந்தியக் குடிமகன்கள் அல்ல. அவர்கள் மலேசியாவில் பிறந்த மலேசியர்கள். அவர்களின் கலாச்சாரம், மொழி, மூதாதையர்களின் வழியாகவே அவர்கள் இந்தியர்களுடன் ஒத்துப் போகின்றனர்.
கடந்த 18 ம் நூற்றாண்டு முதலே என் மூதாதையர்கள் மலேசியாவில் வசிக்கின்றனர். நான் ஐந்தாவது தலைமுறை மலேசியன்.
கபாலி இந்தியாவிலிருந்து இடம் பெயர்ந்தவர்களின் கதையல்ல. இது இந்தியவம்சாவழி மலேசியர்களின் கதை. கபாலி எங்களின் கதை.
கபாலியினைப் பற்றி வெளிவந்துக் கொண்டிருக்கும் பெரும்பாலான விமர்சனங்கள் இந்தியவாழ் மக்களின் அனுபவத்தை மட்டுமே அடிப்படையாய்க் கொண்டே எழுதப்பட்டு வருவதைப் பார்க்கின்றேன்.
இயக்குநர் பா.ரஞ்சித் ஒரு அசாத்தியப் படைப்பையே கொடுத்துள்ளார்.
மலேசிய மக்களுக்கு ஒரு சிறப்புப் பரிசாகவே கபாலியை தயாரித்துள்ளார் (நன்றி அட்டையிலும் இதனைக் குறிப்பிட்டுள்ளார்).
வரலாற்றுச் சம்பவங்கள் நிகழ்காலச் சம்பவங்களின் அடிப்படையில், பல தகவல்களின் தொகுப்பாகவும், கமர்சியல் மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலைகளையும் கவனத்தில் வைத்துக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள கற்பனைப் படைப்பு தான் கபாலி.
இவ்வாறு ரஞ்சித் செய்திருக்காவிட்டால் கபாலி மலேசியாவில் நிச்சயம் தடை செய்யப்பட்டிருக்கும்.
கடந்த 70 ஆண்டுகளாய் மலேசியாவில் நடைபெற்ற சம்பவங்களைத் தழுவிய காட்சிகள் இந்தப் படத்தில் இடபெற்றுள்ளன.
மலேசியத் தமிழர் வரலாற்றினை உள்வாங்கித் தன் படத்தின் கதாப்பாத்திரங்களை உருவாக்கியுள்ளார் பா.ரஞ்சித்.
இந்தக் கட்டுரையின் அடுத்த சில பத்திகளில், பா. ரஞ்சித் எவ்வாறு 100 ஆண்டுகால மலேசியத் தமிழர் வாழ்வை 152 நிமிடத் திரைப்படமாகக் காட்சிப்படுத்தியுள்ளார் என்பதைக் பார்ப்போம். – விசித்ரா
மொழி:
மலேசியர்களின் பேச்சுவழக்கு மொழி தமிழகத்தில் பேசப்படுவதை விட வித்தியாசமானது. கபாலியில் பயன்படுத்தப் பட்டுள்ள மொழி உன்மையில் மலேசியத் தமிழ் பேச்சுவழக்கு மொழியாகும்.
மலேசியர்கள் உண்மையில்தமிழ்நாட்டு மக்களை விடத் தூயத் தமிழ் பேசுகின்றனர். மலேசியர்கள் காடி என்று அழைக்க தமிழ்நாட்டு மக்கள் கார் என்று அழைக்கின்றனர். அதற்குக் காரணம், ஆங்கிலேயர் காலத்திலேயே, தோட்டத் தொழிலாளர்களாகவும் கொத்தடிமைகளாகத் தமிழர்கள் மலேசியாவிற்கு கொண்டுச் செல்லப்பட்டதோடு இருந்த தமிழின் பேச்சுவழக்கு தற்பொழுதும் தொடர்கின்றது.
தமிழ்நாட்டு தமிழில் அதிகமாக ஆங்கிலம் கலந்து பயன்படுத்தப்படுகின்றது. மலேசியர்கள் தூயத் தமிழ்ல் பேசுகின்றனர். மலேசியாவில் உள்ள மின்னல் எஃப்.எம்.மில் ஆங்கிலம் கலக்காத தமிழே பயன்படுத்தப் படுகின்றது. சராசரி இந்தியன் பேசும் தமிழ், மலேசியத் தெருவில் வசிக்கும் பொருவன் பேசும் தமிழுக்கும் உள்ள வித்தியாசத்தைக் கபாலி படம்பிடித்து காட்டுகின்றது.
கபாலி- தொடர்பு: மலேசியத் தமிழில் “சரக்கு” என்றால் பெண். டாஸ்மாக் அரசே நடத்தும் தமிழகத்தில் சரக்கு என்றால் மது.
வார்த்தைகளின் முடிவில் ” லா”- வை மலேசியர்கள் பயன்படுத்துவது சகஜம்.
எனவே கபாலியில் வசனங்கள் மலேசியத் தமிழர் உச்சரிப்புடன் சிறப்பாக வந்துள்ளது.
இன்னும் சில வார்த்தைகள்:
சாவடி – சூப்பர்.
தெருக்குவா – மோசமாக
கோசங்க்-கோசங்க் : சைபர்-சைபர் (கபாலி கூட்டத்தின் பெயர் “00”)
காடி- கார்
கத்தை- துப்பாக்கி
பூரண அழகு- மிகவும் அழகு
செம்மை- மிகவும் அருமை
நாசி – அரிசி
டீ தண்ணி- தேநீர்
பசியாரியாச்சா- உணவருந்திவிட்டாயா?
கம்போங்- கிராமம்
ஆமாவா- அப்படியா?
சடையன்- சீனாக் காரன்
மாத்திரை- மருந்து
கூட்டாளி- நண்பன்
கே-எல்- டவுன்- கோலாலம்பூர் நகரம்
கே-டவுன் – கஜங்க் டவுன்
மசுக்- ஒருக் காட்சியில் நுழைவது அல்லது வெளியேறுவது.
சாதி:
பெரும்பாலான இந்தியவம்சாவழி மலேசியர்கள் தென்னிந்தியர்கள். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, பஞ்சாப் மற்றும் சில வ இந்தியர் வம்சாவழியினர் மலேசியாவில் வசித்து வருகின்றனர்.
குறைந்த அளவில் பாகிஸ்தான் மற்றும் சிங்களவர்கள் கூட வசிக்கின்றனர். ஆனால் இவர்கள் அனைவரும் ” மலேசிய இந்தியர்கள்” எனவே அழைக்கப் படுகின்றனர்.
மலேசியாவில் தமிழில் பேசத் தெரியாவிட்டால் ஏளனமாகவவேப் பார்க்கப்படுவர்.
இந்தப் படத்தில் ” தென்னிந்திய மலேசியர்கள்” அனைவரையும் குறிக்கின்றது.
மேலும், எல்லா எஸ்டேட் தொழிலாளர்களும் கீழ் சாதியைச் சேர்ந்தவர்கள் ( வரலாறு எழுதுபவர்கள் அதை விரும்பினாலும்) அல்ல. ஆனால், சாதியைப் பொருத்தும், ஊரைப் பொருத்தும் வேலைகள் பிரிக்கப் பட்டுள்ளன.
மந்தூர் (எஸ்டேட் தலைவர்கள்) பெரும்பாலும் கிராமத் தலைவர்கள் அல்லது இந்தியாவில் பணக்காரர்கள். கோலா சேலங்கோர் பகுதிக்குச் சென்று பார்ப்போமேயானால் பெரும்பாலும் அங்குள்ள தொழிலாளர்கள் “கவுண்டர்” இனத்தவர்கள். தமிழக “கொங்கு ” பகுதி கிராமங்களில் இருந்து குடும்பம் குடும்பமாக இடம்பெயர்ந்தவர்கள்.
கேமரூன் தீவுகளில் உள்ள விவசாயிகள் பெரும்பாலான கவுண்டர்கள் உள்ளனர்.
முப்பாட்டனார் காலத்தில் இருந்தே கலப்புத் திருமணங்கள் மலேசிய இந்தியர்களிடையே நடைப்பெற்று வருகின்றது. அந்தக் காலத்தில் சில எதிர்ப்புகள் இருந்தது உண்மை.
அது உயர்- கீழ் சாதிகளுக்கு இடையே என்று இல்லாமல், உயர் சாதிக்கிடையே திருமணம் நடந்தால் கூட எதிர்ப்பு இருந்தது.
ஆனால், இந்நாட்களில் இது சகஜமான நிகழ்வாகிப் போய்விட்டது. ஏன், சாதி, நாடு கடந்தும் திருமணங்கள் நடைபெற்று வருகின்றது.
எனவே, கபாலிக்கு தலித் அடையாளப் படுத்த வேண்டிய அவசியமில்லை. அவர், ” நாங்கள் வேற ஜாதி என்பதால் குடும்பத்தினர் எதிர்ப்பு இருந்தது என்று மட்டும் தான் வசனம் வரும்.
வரலாற்று ரீதியாக, ஆங்கிலேயர்களால், ” கிளார்க்” பணிகளுக்கு அழைத்து வரப்பட்ட ” இலங்கைத் தமிழர்கள் ” தங்களை தோட்டத் தொழிலுக்காக இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட தமிழர்களைவிட “உயர்ந்தவர்களாய்” கருதுவது, சாதியால் அல்ல. அது வர்க்கப் பேதம் மற்றும் “தோல் நிற பேதம்”.
இன்றைய தேதியில், சாதி மறுப்பு திருமணத்தைவிட மத மறுப்புத் திருமணங்களுக்கே எதிர்ப்பு நிலவு கின்றது.
இரண்டாம் பாகம் ….(மலேசியத் தமிழர் வரலாறு, ரவுடி கேங், கோவில் இடிப்பு, இந்தியர்கள் vs. சீனர்கள் பிரச்சனை, ரவுடிகள் vs. போலிஸ்).. விரைவில்..
(விசித்திராவின் பிளாக் பக்கத்தில் இருந்து.) தமிழாக்கம் செய்யப்பட்டது.