டெல்லி: இந்திய கடற்படைக்கு ரூ.2,500 கோடி மதிப்பிலான நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கும் திட்டத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியா தற்போது 16 வழக்கமான நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்குகிறது. மேலும் நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கும் திறன் கொண்ட ஆளில்லா கப்பல்களுக்கான கடற்படையின் ரூ.2500 கோடி திட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
உலக நாடுகளின் தற்போதைய நவீன வகை போரின் தாக்குதல் மற்றும் அண்டைய நாடுகளின் மிரட்டல்கள் போன்றவை 3வது உலக போருக்கு வழிவகுக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதுபோல உலகம் முழுவதும் ஆளில்லா சாதனங்களான டிரோன்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, இந்திய அரசும் ராணுவத்தில் நவீன யுக்திகளை கையாளும் வகையில் பல்வேறு போர் உபகரணங்களை தயாரித்து வருகிறது.
அதன் தொடர்ந்து, இந்திய கடற்படை அதிநவீன நீர்மூழ்கி கப்பலை தயாரிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரூ.2,500 கோடி செலவில் ஆளில்லா நீர்மூழ்கி கப்பலை தயாரிக்கும் இந்திய கடற்படையின் திட்டத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதலை வழங்கியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அடுத்த சில மாதங்களில், இந்த திட்டத்துக்கான டெண்டரை இந்திய கடற்படை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆத்மநிர்பார் திட்டத்தின் கீழ் இந்திய கப்பல் கட்டும் நிறுவனங்கள் மேக்-1 நடைமுறையின் கீழ் ஏலம் கோரும் என தெரிகிறது. எ
இந்த கப்பல், எக்ஸ்ட்ரா லார்ஜ் பிரிவில் 100 டன் எடைக்கு மேல் இருக்கும். இந்த கப்பலைக் கொண்டு நீருக்கு அடியில் மறைந்திருக்கும் எதிரிகளின் கப்பல் மற்றும் கடலின் மேற்பரப்பில் உள்ள கப்பல்களை துல்லியமாக அடையாளம் கண்டு தாக்குதல் நடத்த முடியும். இது, இந்திய கடற்படைக்கு கூடுதல் வலிமை சேர்க்கும் என முன்னாள் கடற்படை துணை தலைமை வைஸ் அட்மிரல் எஸ்.என். கோர்மேட் தெரிவித்துள்ளார்.
கண்ணி வெடிகள் இடுதல் மற்றும் கண்ணி வெடிகளை அகற்றுதல், கண்காணிப்பு மற்றும் ஆயுதங்களை ஏவுதல் போன்ற பல பணிகளுக்கு இத்தகைய கப்பல்களை பயன்படுத்த கடற்படை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ம்கியூ-9பி மற்றும் திரிஷ்டி ஹெர்ம்ஸ் 900 போன்ற ட்ரோன்களை மேம்படுத்துவதன் மூலம் அதன் ஆளில்லா நீண்ட தூர கண்காணிப்பு திறன்களை அதிகரிப்பதில் இந்திய கடற்படை கவனம் செலுத்தி வருகிறது.