மும்பை

பாலிவுட் பிரபலமான அனுராக் காஷ்யப் மகளுக்கு பலாத்கார மிரட்டல் வந்தது குறித்து பதிந்த  டிவிட்டரால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அனுராக் காஷ்யப் பாலிவுட்டின் பிரபல இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர் மற்றும் நடிகர் ஆவார். இவருடைய முதல் படம் வெளிவரவில்லை எனினும் அடுத்தடுத்து வெளியான படங்கள் இவருக்கு புகழை தேடித் தந்தன. இவர் மும்பை குண்டு வெடிப்பை ஆதாரமாக வைத்து தயாரித்த பிளாக் பிரைடே இவருக்கு புகழை குவித்தது. அத்துடன் இது குறித்து காஷ்யப் பல சர்ச்சைகளை சந்திக்க நேர்ந்தது.

இவர் திருமணமாகி விவாகரத்து ஆனவர். தற்போது இரண்டாம் மனைவியுடன் வசித்து வருகிறார். இவருடைய மகளின் பெயர் ஆலியா காஷ்யப் ஆகும். தற்போது ஆலியா காஷ்யபுக்கு வந்த ஒரு பலாத்கார மிரட்டல் பதிவை ஒட்டி டிவிட்டரில் கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த விவரத்தை  காண்போம்

அனுராக் காஷ்யப் தனது டிவிட்டரில், “அன்புள்ள மோடி ஐயா, உங்கள் வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள். நாட்டு மக்களுக்கு நீங்கள் அளித்த செய்திக்கு நன்றிகள். ஐயா, தயவு செய்து உங்களுடைய ஆதரவாளர்களிடம் நாங்கள் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என சொல்லுங்கள். உங்கள் வெற்றியை கொண்டாட உங்கள் ஆதரவாளர்கள் எனது மகளை குறித்து தவறாக பதிவிடுகின்றனர்” என பதிந்திருந்தார்.

அத்துடன் தனது பதிவில் அவர் ஒரு ஸ்கிரீன் ஷாட் இணைத்திருந்தார். அதில் சவுக்கிதார் ராம்சங்கி என்பவர் ஆலியா காஷ்யபுக்கு தகாத வார்த்தைகளுடன் செய்தி அனுப்பி அதில் பலாத்கார மிரட்டல் விடுத்துள்ளார். இந்த பதிவைக் கண்ட பலரும் சவுக்கிதார் ராம்சங்கிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அசோக் பண்டிட்

ஆனால் மோடியின் ஆதரவாளரும் பாலிவுட் பிரபலமுமான அசோக் பண்டிட் என்பவர், “இந்த டிவிட்டர் பதிவு போட்டோ ஷாப்பில் உருவானதாக தோன்றுகிறது. ஏனெனினில் அப்படி ஒரு பதிவே எங்கும் இல்லை. உலகமே மகிழ்வுடன் இருக்கும் வேளையில் மோடியை திட்ட ஒரு வாய்ப்பு அளிக்க யாரோ நகர நக்சல் தீவிரவாதியால்  உருவக்கப்பட்டதாக தெரிகிறது” என பதிந்திருந்தார்.

இது அனுராக் காஷ்யப் கோபத்தை கிளறி விட்டுள்ளது. அவர் இதற்கு பதிலாக, “டிவிட்டரில் மற்றவருக்கு போதனை நடத்தும் முன்பு இது குறித்து இன்ஸ்டாகிராமில் தேடிப் பார்க்கவும். இது எனது மகளுக்கு வந்த மிரட்டல் என பதிந்து அதனுடன் ஒரு தகாத வார்த்தையால் திட்டி உள்ளார். இந்த பதிவு நெட்டிசன்கள் இடையே கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.